Close
டிசம்பர் 12, 2024 10:24 காலை

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது!

தீபத் திருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. வருகின்ற டிசம்பர் 13-ஆம் தேதி உலக பிரசித்தி பெற்ற மகா தீப திருவிழா 2668 அடி உயரம் கொண்ட தீப மலையில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

மகா தீப திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்ற நிலையில், இந்த வருடம் சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை பெறும் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வருகிற  டிசம்பர் 12 முதல் 14ம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

அந்தவகையில், காமராஜர் சிலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை, புறவழிச் சாலையில் அமைந்துள்ள எலைட் அரசு மதுபான கடை இயங்காது.

மேலும் திருவண்ணாமலை நகரில் தனியார் ஓட்டல்களில் இயங்கி வரும் மதுபான கூடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top