Close
டிசம்பர் 12, 2024 9:44 காலை

உத்தரவாத காலத்தில் சர்வீஸ் செய்ய கட்டணம் வசூலித்த வாகன டீலருக்கு ரூ. 26,788 அபராதம்..! நுகர்வோர் கோர்ட் உத்தரவு..!

ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவுப்படி, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த ரூ 4,64,671- க்கான பேங்க் டிராப்ட்டை, பாதிக்கப்பட்ட திருச்செங்கோடு அருகே உள்ள வேப்பம்பாளையத்தில் வசிக்கும் செந்தில்குமார் மனைவி ராஜாமணிக்கு நீதிபதி ராமராஜ் வழங்கினார்.

நாமக்கல் :

சரக்கு வாகனத்திற்கு உத்தரவாத காலத்தில், சர்வீஸ் செய்வதற்கு பணம் வசூலித்த டீலர் ரூ. 26,788 இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள காந்தி நகரில் வசித்து வருபவர் சிவக்குமார் (40).  இவர் தனியார் கம்பெனியின் தயாரிப்பான சரக்கு வாகனம் ஒன்றை, நாமக்கல்லில் உள்ள அதன் டீலரிடம் கடந்த 2020ம் ஆண்டு வாங்கினார்.

அந்த வாகனத்துக்கு வாகன உற்பத்தியாளரால் ஓராண்டு காலம் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. ரூ 5,250 கூடுதலாக செலுத்தினால் மேலும் 3 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் வழங்கப்படும் என்று வாகனத்தை விற்பனை செய்த டீலர் தெரிவித்துள்ளார். அந்தத் தொகையையும் சிவக்குமார் வாகனத்தை வாங்கும் போது செலுத்தியுள்ளார்.

வாகனத்திற்கு 3 முறை, டீலர் கட்டணமில்லாத சர்வீஸ் செய்து கொடுத்துள்ளார். வாகனம் 30,000 கி.மீ இயக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் ஏற்பட்டதால், குறிப்பட்ட இடைவöளியில் 4வது இலவச சர்வீஸ் செய்ய முடியவில்லை.

கொரோனா தளர்விற்குப் பின்னர் 50,000 கி.மீ வாகனம் ஓடிய நிலையில் டீலரிடம் வாகனத்தை சர்வீசுக்கு கொடுத்துள்ளார். 30,000 கிலோமீட்டர் சர்வீஸை உத்திரவாத விதியின்படி விநியோகஸ்தரிடம் செய்யாமல் வெளியில் செய்து கொண்டதால் உத்தரவாதம் இனிமேல் வழங்கப்பட மாட்டாது என்று வாகன சர்வீஸ் டீலர் தெரிவித்துள்ளார்.

வாகனத்தில் பழுதுபட்ட பாகங்களை மாற்ற ரூ 13,788 ஐ வாகன சர்வீஸ் டீலர் சிவக்குமாரிடம் கேட்டுள்ளார். சிவகுமார் அந்த தொகையை செலுத்தி வாகனத்தை சர்வீஸ் செய்து பெற்றுள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், வாகன உரிமையாளர் சிவகுமார், டீலர் மீது வழக்கு தாக்கல் செய்தார். விசாரணை முடிவடைந்த நிலையில், நுகார்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்.

இத்தீர்ப்பில், வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் டீலர் சேவை குறைபாடு புரிந்துள்ளதால், வாடிக்கையாளர் செலுத்திய ரூ 13,788 மற்றும் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ 13,000 ஆகியவற்றை சேர்த்து, 4 வாரத்துக்குள் வழக்கு தாக்கல் செய்தவருக்கு வழங்க, வாகன விற்பனை மற்றும் சர்வீஸ் டீலருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவுப்படி, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்த ரூ 4,64,671- க்கான பேங்க் டிராப்ட்டை, பாதிக்கப்பட்ட திருச்செங்கோடு அருகே உள்ள வேப்பம்பாளையத்தில் வசிக்கும் செந்தில்குமார் மனைவி ராஜாமணிக்கு நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top