Close
டிசம்பர் 12, 2024 7:46 காலை

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

கோப்பு படம்

தீபத் திருவிழாவிற்கு திருவண்ணாமலைக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும் நிகழ்ச்சி வருகிற 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவண்ணாமலையில் சுமார் 40 லட்ச பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பலத்த பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. இதையடுத்து, தெற்கு ரயில்வேயும் 4 நாட்கள் சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்து உள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

வருகிற 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே மெமு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது.

முதல் ரெயில் 12-ம் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.15 மணி அளவில் விழுப்புரம் ஜங்ஷனில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.

பின்னர் அந்த ரெயில் 13-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் ஜங்சனுக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும்.

அதேபோல் மற்றொரு ரெயில் விழுப்புரம் ஜங்ஷனிலிருந்து 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணியளவில் திருவண்ணாமலையை சென்றடையும். பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு விழுப்புரத்தை வந்தடையும்.

இந்த நேர அடிப்படையில் 15-ம் தேதி வரை ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. அதேபோல் மற்றொரு சிறப்பு ரெயில் திருச்சியில் இருந்து 13-ம் தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு மதியம் 1.25 மணிக்கு வந்தடையும்.

பின்னர் அந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.50 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தை சென்றடையும். அதனை தொடர்ந்து அந்த ரெயில் வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12.25 க்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு 14-ம் தேதி அதிகாலை 7.20 மணிக்கு திருச்சியை சென்று சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top