Close
டிசம்பர் 12, 2024 5:50 காலை

தீபத்திருவிழா மகா தேரோட்டம்: விண்ணைப்பிளந்த அரோகரா கோஷம்..!

மகாதீபம் தேரோட்டம்

விநாயகர் , முருகர் தேர் வந்தடைந்த நிலையில் அண்ணாமலையார் தேரோட்டம் தொடங்கியது

பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.

ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.  இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா புதன்கிழமை  4 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.தீபத் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் தினமும் காலை, இரவு வேளைகளில் மாட வீதிகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா வருவது வழக்கம்.

தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கி வைத்த ஆட்சியர் மற்றும் கம்பன்

அதன்படி, தீபத் திருவிழாவின் 7 -வது நாளான இன்று அண்ணாமலையார் திருக்கோவில் வளாகத்தில் இரண்டாம் பிரகாரத்தில் அலங்கார மண்டபத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கோவில் வளாகத்தை வலம் வந்து 16 கால் மண்டப அருகே அவரவர்களுக்கான தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

இன்று காலை  6.45 மணிக்கு மேல் விநாயகா் தேரோட்டம் தொடங்கியது. இந்தத் தேர் மாட வீதிகளில் வளம் வந்து மீண்டும் 9.45 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

அதன் பின்னர் 10 மணியளவில் தெய்வானை சமேத முருக பெருமான் தேரோட்டம் தொடங்கியது. இந்தத் தேர் மாட வீதிகளில் வளம் வந்து மீண்டும் நிலைக்கு 12 மணிக்கு வந்தடைந்தது.

அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம்

அதன் பின் தற்போது அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் 12.30 மணி அளவில் அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை பிளக்க ஆண்களும் பெண்களும் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், டிவிஎஸ் ராஜாராம் , மாநகராட்சி மேயர் நிர்மலா வேல்மாறன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன்,

அதிமுக நகர செயலாளர் செல்வம், மாநகராட்சி துணைத் தலைவர் ராஜாங்கம், அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் ஜோதி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன் மற்றும் இந்து அறநிலைய துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டு அண்ணாமலையார் தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top