Close
டிசம்பர் 12, 2024 2:53 காலை

நாமக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றியும் போக்குவரத்து நெருக்கடி: தீர்வு காண அதிகாரிகள் ஆய்வு

நாமக்கல்லில் வாகன நெரிசலை குறைப்பது சம்மந்தமாக, திருச்சி மெயின் ரோட்டில் பயணியர் மாளிகை அருகே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

நாமக்கல் பஸ் ஸ்டாண்டை, முதலைப்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்தபின்பும், நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதைக் குறைப்பது குறித்து, ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் பழைய பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்ட் கடந்த மாதம் 10ம் தேதி முதல், சேலம் ரோட்டில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள முதலைப்பட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. சேலம், கரூர், ஈரோடு, கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களுக்கு செல்லும் வெளியூர் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்கப்படுகின்றன.

பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுன் பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இதனால் நாமக்கல் நகரத்திற்குள் பஸ்கள் வந்து செல்லும் எண்ணிக்கை குறைந்து போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே இருந்ததுபோல் நகருக்குள் குறிப்பாக, மெயின்ரோடு, மணிக்கூண்டு, பரமத்தி ரோடு, கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்களில் வருவோரும், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக பழைய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயில் அருகே உள்ள பஸ் ஸ்டாப், திருச்சி ரோடு பயணியர் மாளிகை அருகே உள்ள பஸ் ஸ்டாப், சேலம் ரோடு கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்ததை¬விட போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. எனவே நாமக்கல் நகரில் நிலவும் வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாமக்கல் நகரில் வாகனப் போக்குவரத்து மாற்றியமைப்பது தொடர்பாக நாமக்கல் ஆர்டிஓ பார்த்திபன் தலைமையில், வட்டார போக்குவரத்து துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் அரசு போக்குவரத்துக் கழகத்தினர், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆகியோர் நேற்று நாமக்கல் திருச்சி ரோடு, மெயின் ரோடு, பார்க் ரோடு உள்ளிட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறையினர் கூறுகையில், மாநகரப் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வாகனப் போக்குவரத்தை மாற்றியமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதற்கட்டமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும் என கூறினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top