திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.
தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள், திருவண்ணாமலை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட உள்ளனர்.
திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 156 பள்ளிகளில் போலீசார் தங்க உள்ளதன் காரணமாக, அந்தப் பள்ளிகளுக்கு 8 ஆம் தேதி முதல் டிசம்பர் 16 வரை 9 நாட்களுக்கு விடுமுறை, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி , திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர். விடுமுறை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அருணாசலேஸ்வரா் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.