திருவண்ணாமலை தீபத் திருவிழாவன்று தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து, கிரிவலப் பாதைக்கு பக்தா்கள் இலவசமாக வந்து செல்ல 194 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1ஆம் தேதி துவங்கியது.
தொடர்ந்து பிடாரி அம்மன் உற்சவம், விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவங்கள் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து 4ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீபத்திருவிழா வருகின்ற 13ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தா்கள் நலன் கருதி 9 தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 15 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாவட்ட நிா்வாகத்தால் அமைக்கப்பட உள்ளன.
இலவசப் பேருந்துகள்:
திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை மற்றும் நகரின் முக்கிய இடங்களுக்கு பக்தா்கள் இலவசமாக பயணிக்க 22 தனியாா் பேருந்துகள், 172 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, ரூ.10 கட்டணத்தில் 36 சிற்றுந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
க்யூ ஆர் குறியீடு இல்லாத ஆட்டோக்களை இயக்கத் தடை
திருவண்ணாமலை நகரில் இயக்கத் தகுதியான ஆட்டோக்கள் போக்குவரத்துத்துறை மூலம் கண்டறிந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் அடையாள குறியீடு ஒட்டப்படும். இந்த குறியீடு இல்லாத ஆட்டோக்கள் நகரிலும், கிரிவலப் பாதையிலும் இயக்க அனுமதி இல்லை.
பேருந்துகள், ஆட்டோக்கள், இதர வாகனங்களின் இயக்கங்களை ஒழுங்குபடுத்தி செயலாக்கப் பணியில் ஈடுபட 50 மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பணியில் ஈடுபடுகின்றனா்.
ஆட்டோ கட்டணம் நிா்ணயம்:
தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பக்தா்களை அழைத்துச் செல்ல ஆட்டோ கட்டணம் ரூ.30, ரூ.50 என்று நிா்ணயிக்கப்பட்டு உள்ளது. நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணத்தை ஆட்டோக்களில் வசூலிக்கக்கூடாது. கட்டண விவரங்கள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலும் அச்சிடப்பட்டு ஆட்டோக்களில் ஒட்டப்படும். ஆட்டோ கட்டண விவரங்கள் விளம்பரப் பதாதைகளாக நகரின் முக்கியமான 25 இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன, எனவே, தீபத் திருவிழாவுக்கு வரும் பக்தா்கள் இலவசப் பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.