திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள பருவதமலை அடிவாரத்தில் வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை காா்த்திகை தீபத்தின் போது இங்கு தீபம் ஏற்றுவது வழக்கம். மேலும், வீரபத்திர சுவாமிகள் கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ளது.
தொடா்ந்து, மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டீஸ்வரா் கோயிலில் தனூா் (மாா்கழி) மாத பிறப்பையொட்டி, பருவத மலையில் சுமாா் 25 கி.மீ. தொலைவு பக்தா்கள் கிரிவலம் மற்றும் சுவாமி உற்சவம் நடைபெறும்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பக்தா்களுக்கு சாலை வசதி, குடிநீா், கழிப்பறை, மருத்துவம், போக்குவரத்து, தடையில்லா மின்சாரம், தீயணைப்பு வாகனம் என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது தொடா்பாக அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆலோசனை மேற்கொண்டாா்.
தொடர்ந்து பருவதமலை மீது உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர், சமேத பிரம்மாம்பிகை தாயாரை தரிசனம் செய்ய மகா தீப திருவிழாவை கண்டுகளிப்பதற்கும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவர். அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
கூட்டத்தில் கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுகையில், சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள்,சாலை வசதிகள், மருத்துவ வசதிகள், போலீஸ் பாதுகாப்பு, தீயணைப்பு துறை பாதுகாப்பு ஆகிய அனைத்து அத்தியாவசியமான பாதுகாப்பு வசதிகளையும் மக்களுக்கு அமைத்து கொடுக்க வேண்டும்.
வனத்துறையினர் மூலம் மக்கள் பருவதமலை ஏற செல்லும் வழியில் முள் புதர்கள் அதிகமாக சூழ்ந்துள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்தி கொடுக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கு வழி அமைத்துக் கொடுக்க வேண்டும்.
அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைத்து இந்த தீபத் திருவிழாவை வழிநடத்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்து கொடுக்க வேண்டும் என பேசினார். மேலும் வரும் ஆண்டிலாவது பருவதமலை சுற்றியுள்ள 26 கிலோமீட்டர் கிரிவலப் பாதையை தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ஆட்சியர் பேசுகையில், சென்ற ஆண்டு போக்குவரத்து வசதி அமைத்துக் கொடுத்ததை விட இந்த ஆண்டு இன்னும் அதிகப்படுத்தி போக்குவரத்து வசதி அமைத்துக் கொடுக்கப்படும். அதேபோல் வனத்துறை மூலம் முள் செடி கொடி புதர்களை அப்புறப்படுத்தி மக்கள் கிரிவலம் செல்வதற்கு சரியான வழியை அமைத்துக் கொடுக்கப்படும்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மின்விளக்கு வசதி இரண்டும் மலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கு உண்டான வழியை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கிரிவலம் செல்லும் பகுதிகளில் வட்டார வளர்ச்சி துறை மூலம் 100 நாள் பணிகளை அமைத்து சாலைகளை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும் .மேலும் பக்தர்கள் மலையேற செல்லும்பொழுது அவர்களின் உடல்நிலை பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட திட்ட இயக்குநா் மணி, ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், மாவட்ட உதவி ஆணையா் ஜோதிலட்சுமி, ஊராட்சிமன்றத் தலைவா் எழில்மாறன், ஒன்றியக்குழு உறுப்பினா் கலையரசி துரை மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், அரசியல் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.