ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும், பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்றப்பட்டது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வருகின்றனா்.
ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் நடை திறக்கப்பட்டு அருணாச்சலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், பராசக்தி அம்மன் , சண்டிகேஸ்வரர் மற்றும் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோயிலின் கருவறையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அருணாச்சலேஸ்வரர் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோவிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதியில் பரணி தீபத்தினை ஏற்றினர். இந்த பரணி தீப தரிசன தரிசனத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டுக்களித்தனர்.
முன்னதாக பரணி தீபத்தினை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது கோயிலில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பரணி தீப விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன் , இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அறங்காவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகா தீபம்
இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக மாலை 6 மணிக்கு தீபங்களை மேள தாளத்துடன் வெளியே எடுத்துவந்து கொடிக் கம்பம் அருகேயுள்ள அகண்ட தீப கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளி வந்து காட்சி கொடுத்துவிட்டு உள்ளே சென்று விடுவார்.
அப்போது வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டியபடி, மலைக்கு அடையாளம் காட்டுவார்கள். உடனே மலைமீது இருக்கும் பர்வதராஜ குலத்தைச் சேர்ந்தவர்கள், மலை மீது தயாராக வைக்கப்பட்டிருக்கும் செப்புக் கொப்பரையில் மகாதீபத்தை ஏற்றுவார்கள். இந்த மகா தீபமானது தொடர்ந்து 10 நாட்கள் அணையாமல் எரியும். இரவில் பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியும்.
