Close
ஏப்ரல் 3, 2025 12:33 மணி

திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம்

சைவத்தின் தலைநகராக விளங்கும் திருவண்ணாமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய திருவிழாவான தீபத் திருவிழா இன்று நடைபெற உள்ளது.

இன்று அதிகாலை பரணி தீபம் அருணாச்சலேஸ்வரர் சன்னதி முன்பு ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை மகா தீபம் அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட உள்ளது.

திரு அண்ணாமலை மகாதீபம் சிறப்புகள்

உலகறிந்த ஆன்மீக சொற்களில் ஒன்றாக நெடுநாளாய் நிரந்தரமாய் நிலையாய் நீடித்து உலா வந்து கொண்டிருக்கும் ஒற்றை சொல் திருவண்ணாமலை.

நவ நாகரிக நவீன கணிப்பொறி காலத்தில் உள்ளூர் வெளியூர் உள்நாடு வெளிநாடு என உலகெங்கும் இன்றைய இளைஞர்கள் பல்வேறு தலைப்புகளில் திருவண்ணாமலை பற்றி ஆய்வு செய்து கொண்டே தான் இருக்கின்றனர்.

சைவமும் தமிழும் தழைத்தோங்கியதும் இந்த திருவண்ணாமலை தான். அது மட்டுமல்ல சைவத்தின் தலைநகரமும் திருவண்ணாமலையில் தான்,

இட ஒதுக்கீடு

இட ஒதுக்கீடு பற்றி இப்பொழுதுதான் அதிகம் பேசுகிறார்கள் ஆனால் பெண்களுக்கு அந்த காலத்திலேயே 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தவர் சிவபெருமான். அந்த திருத்தலமும் திருவண்ணாமலை தான் என்று கூறுவார். அது உண்மைதான் பெண்ணுரிமைக்காக பலரும் பேசிக் கொண்டிருக்கும் காலம் இது. பெண்ணுரிமை கோரி போராடியவர்கள் பட்டியலும் நீளமானதே.

ஆனால் அந்தக் காலத்திலேயே தன் உடலில் சரிபாதியை இறைவிக்கு ஒதுக்கீடு செய்தவர் சிவபெருமான். ஆணும் பெண்ணும் சரிசமமாய் கலந்து நின்று அருளும் அந்த திருமேனிக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர்.

கைலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த ஈசனின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.. இதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க பூவுலகம் வந்து காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் புரிந்தாள். ஒரு நாள் கம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்னை காமாட்சி தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.

அப்போது அன்னை காமாட்சி “அய்யனே நீங்கள் என்னை எப்போதும் பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும்” வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாமலை சென்று தவம் செய் என்றார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி ஒன்று தோன்றியது. அதை நோக்கி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது திருமேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்டார் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

ஆட்டநாயகன்

கார்த்திகை தீபத் திருவிழாவின் ஆட்டநாயகன் அர்த்தநாரீஸ்வரர் தான், தீபத்திருநாள் அன்று மாலை ஓரிரு நிமிடங்கள் மட்டுமே ஓடி வந்து காட்சி தந்து ஓடோடி உள்ளே சென்று விடுவார் இந்த அர்த்தநாரீஸ்வரர்.

இந்த இரண்டு நிமிட தரிசனத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கடலென திரண்டு இருக்கும்.

இவர் கொடிமரம் அருகில் வரும்போது பெரிய தீவட்டியை ஆட்டி மலையில் தயாராக இருப்பவர்களுக்கு சைகை காட்டுவார்கள் உடனே மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்படும். அண்ணாமலைக்கு அரோகரா என்று கோஷம் விண்ணை பிளக்கும்.

மேலும் திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக சேஷாத்திரி சுவாமிகள், ரமணர், உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

திருவண்ணாமலைக்கு மற்றொரு தனி சிறப்பு உண்டு . ஆம் , ஆண் ஆதிக்கம் அதிகம் உள்ள வீட்டை சிதம்பரம் என்று சொல்கிறார்கள். பெண் ஆதிக்கம் மிகுந்த வீட்டை மதுரை என்று  கூறுவார்கள்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாய் இல்லறம் நடத்தும் இனிய குடும்பத்தை திருவண்ணாமலை என்றே அழைக்கிறார்கள்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top