நாமக்கல்:
தமிழ்நாடு அரசின் கபீர் புரஸ்கார் விருதுபெற தகுதியானவர்கள் வரும் 15ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
சமுதாய நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதலமைச்சரால், குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், போலீஸ், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப்பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் அவை நீங்கலாக) இவ்விருதினைப் பெறத் தகுதியுடையவராவர்.
இவ்விருது ஒரு சாதி, இனம் வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ, வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது,
வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மன வலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருது, 3 அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படும். முறையே ரூ. 20,000, ரூ. 10,000 மற்றும் ரூ.5,000 வீதம் பரிசு மற்றும் பாராட்டுப்பத்திரம் வழங்கப்படும்.
2025ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட https://awards.tn.gov.in என்ற வெப்சைட்டில் மட்டும் டிச. 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, முதலமைச்சரால் வரும் ஜன. 26 குடியரசு தினத்தன்று விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.