திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
பஞ்சபூத திருத்தலங்களில் ‘அக்னி’ திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. காவல் தெய்வங்களின் வழிபாடு நிறைவு பெற்றதும், மூலவர் சந்நிதி முன்பு தங்க கொடிமரத்தில் கடந்த 4-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெற்றது.
7-ம் நாள் உற்சவத்தில் மகா தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் தேதி காலை தொடங்கி 24-ம் தேதி அதிகாலை வரை 5 திருத்தேர்கள் மாட வீதியுலா வந்தது.
கார்த்திகைத் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் காலை ஏற்றப்பட்டன. மூலவர் சந்நிதி முன்பு அதிகாலை 3.40 மணியளவில் பரணி தீபத்தை சிவாச்சார்யார்கள் ஏற்றினர்.
பின்னர், அந்த தீபத்தை வெளியே கொண்டு, ‘பஞ்சபூதங்களும் பரம்பொருளே, இறைவன் ஒருவனே’ என ஏகன் – அநேகன் தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், 5 விளக்குகளில் ஏற்றப்பட்டன.
மாலையில் பஞ்சமூர்த்திகள், சாமி சன்னதி முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, சரியாக 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி, சன்னதியில் இருந்து ஆடியபடியே கொடிமரம் முன்பு வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது.
கொடிமரம் முன்பு ஏற்றப்பட்ட மகா தீபம்
அதே நேரத்தில் 2668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணியளவில் ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. பர்வதராஜ குல சமூகத்தினர் தீபத்தை ஏற்றி வைத்தனர்.
அப்போது கோவிலில் கூடி இருக்கும் பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
மகாதீபத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் உள்ளனர். கிரிவல பாதையில் 14 கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கியபடி முழக்கமிட்டது திருவண்ணாமலை எங்கும் எதிரொலித்தது.
கோயில் உட்பட நகரம் முழுவதும் மின் ஒளியில் ஜொலித்தன. வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி மக்கள் வழிபட்டனர்.