நாமக்கல்:
விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் சரண்யா மற்றும் தேவிப்பிரியா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், கார்த்திகை பட்டத்தில் முக்கிய எண்ணெய் வித்து பயிரான நிலக்கடலை அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் இப்பட்டத்திற்கு உகந்த தரமான விதை ரகங்களைத் தேர்ந்தெடுத்து விதைத்தால், கூடுதல் மகசூல் பெறுவதுடன் நல்ல லாபமும் ஈட்ட முடியும். நல்ல மகசூலுக்கு பயிர் சாகுபடி பருவம், பருவத்திற்கேற்ற விதை ரகத்தேர்வு, விதைத்தரம் ஆகிய மூன்றும் கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.
தரமான விதை என்பது நல்ல முளைப்புத்திறன், சரியான ஈரப்பதம், புறத்தூய்மை, இனத்தூய்மை, பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாமல் இருத்தல் வேண்டும். தரமான விதைகளைத் தேர்வு செய்து விதைப்பு மேற்கொள்ளும் போது விதைக்கான செலவை குறைத்து, பரிந்துரைக்கப்பட்ட விதையளவை பயன்படுத்துவதுடன், வயலில் உரிய பயிர் எண்ணிக்கை பராமரிக்க இயலும். இதன்மூலம் அதிக மகசூல் பெற முடியும்.
தரமான நிலக்கடலை விதை குறைந்தபட்சம் 70 சதவீதம் முளைப்புத்திறனும், 9 சதவீதம் ஈரப்பதமும், 96 சதவீதம் புறத்தூய்மையும் இருத்தல் அவசியம். விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தாங்கள் சாகுபடி செய்ய உள்ள கார்த்திகை பட்ட விதைகளை நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும், விதைப்பரிசோதனை நிலையத்தில், ஒரு விதை மாதிரிக்கு ரூ. 80 செலுத்தி முளைப்புத்திறன், ஈரப்பதம் மற்றும் புறத்தூய்மை ஆகியவை பரிசோதனை செய்து விவசாயிகள், தரமான விதைகளை உபயோகித்து அதிக மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.