நாமக்கல் :
சேந்தமங்கலத்தில் அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் இந்த ஆண்டு முதல் செயல்படத் துவங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.
இது குறித்து, ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சேந்தமங்கலம் பகுதியில் ஏழை, எளிய மலைவாழ் மாணவர்கள் தொழிற் பயிற்சி பெறுவதற்கு அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது அரசு உத்தரவு வெளியிடப்பட்டு, பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சேந்தமங்கலம் அரசு கலைக் கல்லூரியில் தற்காலிகமாக அரசு ஐடிஐ செயல்படும்.
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாணவ மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டு, பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு விரைவில் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ், சேந்தமங்கலத்தில் துவக்கப்படும ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையத்தில், டெக்ஸ்டைல் மெகட்ரானிக்ஸ், மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கில், சென்ட்ரல் ஏர்கண்டிஷன் பிளாண்ட் மெக்கானிக் ஆகிய இரண்டு ஆண்டுகால தொழிற்பிரிவுகளும், ஹெல்த் சானிடரி இன்ஸ்பெக்டர் என்ற ஓராண்டுகால தொழிற்பிரிவும் இந்த ஆண்டு தொடங்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி காலத்தின் பொழுது பிரதி மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, விலையில்லா பாடபுத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், விலையில்லா காலணி, விலையில்லா சைக்கிள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை, தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 -உதவித்தொகை மற்றும் கட்டணமில்லா அரசு பஸ் பாஸ் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட உள்ளது.
இதனை மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொண்டு தொழிற்பயிற்சி பெற்று சுய தொழில் முனைவோர்களாக உருவாகிடவேண்டும். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் புதிய அரசு ஐடிஐ தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.