தீபத் திருவிழா, யார் பெரியவர் போட்டோ போட்டி, இது பிரம்மா விஷ்ணுவிற்கு நடந்த போட்டி அல்ல மாவட்ட நிர்வாகத்திற்கும் போலீசிற்கும் நடந்த போட்டி, கலெக்டருக்கே இந்த நிலைமை என்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகும் வீடியோ தான் ஹாட் டாபிக்
தீபத் திருவிழாவா அல்லது காக்கி திருவிழாவா என கேட்கும் அளவிற்கு திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் காவல்துறையினர் குவிந்திருந்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி தொடர்ந்து காலை இரவு சுவாமி ஊர்வலம் மாட வீதியில் சிறப்பாக நடைபெற்றது.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.
இத் திருவிழாவிற்காக பல்வேறு பணிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர் நிலையிலான அதிகாரிகள்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த அடையாள அட்டைகளுடன் திருவண்ணாமலைக்கு வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் மேற்கு கோபுரம் அதாவது பே கோபுரம், அருகில் உள்ள விவிஐபி களுக்கான நுழைவு வாயில் வழியே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக கோவிலுக்குள் செல்ல முயன்ற வருவாய்த்துணையினர் மற்றும் அதிகாரிகளை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியரின் காரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை இறங்கி நடந்து செல்லுங்கள் என கூறியதாக கூறப்படுகிறது.
வாக்குவாதம்
இதனால் ஆத்திரமடைந்த வருவாய்த் துறையினர் ஆந்திரா, கர்நாடகா, மாநில பதிவெண்கொண்ட கார்களை மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் எங்கள் அதிகாரியை இறங்கிப் போங்கள் என எவ்வாறு சொல்லலாம் என கேட்டு போலீசார் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ிேமாவட்ட ஆட்சியர்
இந்த பரபரப்பான சூழலில் திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன் செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வருமா உள்ளிட்ட மூன்று சார் ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜன், வருவாய் ஊரக வளர்ச்சி மாநகராட்சி உயர் அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்தனர்.
அவர்களையும் போலீசார் அனுமதிக்காததால் அவர்களும் செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , வருவாய்த்துறையினர் மற்றும் அதிகாரிகள் முறையிட்டனர்.
உடனடியாக அங்கு வந்த ஆட்சியர் மூன்று மாதங்களாக தீபத் திருவிழா ஏற்பாடுகளை செய்து வருகிறோம். வருவாய்த்துறையினரை விடாமல் தடுத்தால் உள்ளே யார் பணியில் ஈடுபடுவது என போலீசாரிடம் மிகக் கோபமாக கடிந்து கொண்டார்.
உடனடியாக பல மணி நேரமாக காத்திருந்த வருவாய்த் துறையினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். மேலும் அதிகாரிகள் வந்த கார்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
அப்போது கர்நாடக மாநில பதிவெண் கொண்ட ஒரு கார் மட்டும் உள்ளே வந்தது. அதனை போலீசார் அனுமதித்துள்ளனர். இதை தடுத்த வருவாய் துறையினர் கர்நாடகா மாநில பதிவென் கொண்ட காரை மட்டும் எவ்வாறு அனுமதித்தீர்கள் என காவல்துறையினரிடம் கேட்டு மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் தலையிட்டு வருவாய்த்துறையினரை உள்ளே அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாமானிய பக்தர்களின் நிலைமை மிகவும் மோசம்
தீபத் திருவிழாவிற்கு வந்த அதிகாரிகளுக்கு அந்த நிலைமை என்றால் சாமானிய பக்தர்களின் நிலைமை மிகவும் மோசம். இதுகுறித்து திருவண்ணாமலை பொதுமக்கள் வேதனையுடன் கூறுகையில்;
பலர் தங்கள் கைகளில் பாஸ் இருந்தும் இந்த பாஸ்கள் எல்லாம் செல்லாது எனக் கூறி காவல்துறையினர் அவர்களை வழியிலேயே மடக்கி அனுப்பி விட்டன ராம். இதனால் நொந்து போன பக்தர்கள் செய்வதறியாமல் திகைத்து நின்றார்களாம்.
இதைவிட பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தே வெளியில் வர முடியாத படி கோவிலை சுற்றியுள்ள அனைத்து தெருக்களும் அடைக்கப்பட்டது.
நாங்கள் இந்த வீதியில் தான் வசிக்கிறோம் என கூறியதற்கு காவல்துறையினர் ஆதார் கார்டை காண்பியுங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு பொதுமக்கள் நான் வீட்டை விட்டு இறங்கி கடைக்கு வந்து தக்காளி வாங்க வந்தேன் அதற்கு எதற்கு ஆதார் கார்டு என கேட்டுள்ளார். இதனால் அவருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதே போல் பல தெருக்களிலும் இதே நிலைதான்.
கோயிலைச் சுற்றியும் உள்ள தெருக்கள் பூட்டி மக்களை சிறை வைத்து விட்டு அவசரமாக மருத்துவ மனை செல்ல வேண்டும் எனில் மக்கள் நிலை என்ன? மக்களைக் காப்பாற்றத் தான் அரசு உள்ளது. ஆனால் அதிகாரிகள் மக்களை தொல்லை தருவது எந்த வகையில் நியாயம்?
தீபத் திருவிழா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு போலீசாரின் கெடுபிடி இருந்ததாகவும், இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் பொதுமக்களும் பக்தர்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.