நாமக்கல்:
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழு கூட்டம் மாவட்டத்தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
மாவட்ட செயலாளர் சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் தேவகி, மகளிரணி அமைப்பாளர் பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் முருக செல்வராசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழக தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2006ம் ஆண்டு ஜூன் 1 முதல் முன்தேதியிட்டு, மத்திய அரசுப்பள்ளி ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்கவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்து, தமிழக ஆசிரியர்கள், அரசு ஊழியருக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை 2003ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் தொடர்ந்து வழங்க வேண்டும்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பை, ஒப்படைப்பு செய்து விடுப்பூதியம் பெறும் உரிமையை, தமிழக அரசு மீண்டும் வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் வாக்குறுதியின்படி, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை, பள்ளி ஆசிரியருக்கு தமிழக அரசு வழங்க வேண்டும்.
தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு, மாநில பணிமூப்பு முறையை திணிக்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி பணிமூப்பு முறையை தொடர்ந்திட வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர், நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி இன்றி சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு மருத்துவர் பாதுகாப்புச்சட்டம் இருப்பதுபோல், பள்ளி ஆசிரியர்களையும், பள்ளிகளையும் பாதுகாக்கும் வகையில் ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், மைய அலுவலர் பணிகளில் இருந்து பள்ளி ஆசிரியர்களை முற்றிலுமாக விடுவிக்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.