தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தனுர் மாதம் என்றழைக்கப்படும் மார்கழி.
மார்கழி மாதம் மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். அந்த மாதத்தில் எல்லோரும் அதிகாலையில் எழுந்து இறைவழிபாடு செய்வதென்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்.
தேவலோகத்தில் வாழும் தேவர்களுக்கு தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் பகல் பொழுதாகவும், ஆடியில் இருந்து மார்கழி மாதம் வரையில் இரவாகவும் கருதப்படுகிறது. இதில் பகலை உத்தராயணம் என்றும் இரவை தட்சிணாயனம் என்றும் அழைப்பார்கள். இவ்வாறு நோக்கும்போது மார்கழி மாதம், தேவலோகத்தின் விடியற்காலையாகும். அக்காலத்தையே பிரம்ம முகூர்த்தம் ” உஷத் காலம்’ என்கிறோம். ஆகையால் இம்மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி இறைவனை வணங்கினால் ஆரோக்கியத்துடன் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக வாழ, தேவர்கள் ஆசீர்வதிப்பர் என்பது நம்பிக்கை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை
நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை திருத்தலத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை உற்சவ மூர்த்தியான அண்ணாமலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் அண்ணாமலையார் ஆலயத்தில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து மார்கழி மாதத்திள் நால்வரில் ஒருவரான சுவாமி மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்கள் ஓதுவா மூர்த்திகளால் கருவறையில் பாடப்பட்டது.
மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய இடம் திருவண்ணாமலை, ஆதியும் அந்தம் இல்லா அருள் பெறும் ஜோதியை என தொடங்கும் திருவெம்பாவை அருளிய திருத்தலம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 13 ந்தேதி மகா தீபத்திருவிழா நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் நேற்றோடு முடிவடைந்து மார்கழி மாதம் பிறந்தது. மார்கழி மாத பிறப்பையொட்டி கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் சாமிக்கு தங்க கவசம், அம்மன் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மாடவீதியில் அமைந்துள்ள பழமையான பூத நாராயண பெருமாள் கோவிலில் அதிகாலை சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில், 4,668 அடி உயரமுள்ள பர்வத மலையில், பிரம்மாம்பிகை சமேத மல்லிகாஜுனேஸ்வரர் கோவில், படவேடு லட்சுமி நரசிம்மர் கோவில், ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோவில்களில், திருப்பாவை. திருவெம்பாவை பாடல்கள் பாடி வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
