திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியில் பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மையில் பலத்த மழை பெய்தது. இதனால், ஸ்ரீரங்கராஜபுரம், பொன்னூா், தெய்யாா், கொட்டை, குறிப்பேடு, ஓசூா் உள்ளிட்ட கிராமங்களில் விவசாய நிலங்களில் பெருமளவு மழைநீா் தேங்கியது.
இதனால், சுமாா் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. மேலும், ஸ்ரீரங்கராஜபுரம், அம்மணம்பாக்கம் கிராம தரைப் பாலங்கள் மீது வெள்ளநீா் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆரணி எம்.பி. எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் பொன்னூா், ஸ்ரீரங்கராஜபுரம் ஆகிய கிராமங்களில் பயிா் சேதங்களை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். பயிா் சேத பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் அவா்கள் கேட்டறிந்தனா்.
அப்போது, சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கக் கோரி, அவா்களிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும், ஸ்ரீரங்கராஜபுரம் கிராமத்தில் தரைப்பாலம் உள்ள பகுதியில் மேம்பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா். அப்போது உடனடியாக உயர் அதிகாரிகளிடம் இப்பகுதியில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் பொது மக்களிடம் விரைவில் உங்கள் பகுதியில் தமிழக அரசு நிதி உதவி கொண்டு பாலம் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை ,வேளாண்மை துறை அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
இராட்டிணமங்கலத்தில் கபடிப் போட்டி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் 5-ஆம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சித் தலைவா் கைலாசம் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக தரணிவேந்தன், எம்.பி. கலந்துகொண்டு கபடிப் போட்டியை தொடங்கிவைத்தாா்.
இந்தப் போட்டியில் சென்னை, வேலூா், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இருந்து கபடி அணிகள் கலந்துகொண்டன. வெற்றிபெற்ற அணிகளுக்கு முறையே முதல் பரிசாக ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.15,000 ரொக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும், மூன்றாம் பரிசாக ரூ.10,000 ரொக்கம் மற்றும் ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கோப்பையும் வழங்கப்பட்டன. மேலும் 16 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை இராட்டிணமங்கலம் விழாக் குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.