Close
டிசம்பர் 18, 2024 8:48 காலை

நான்காம் நாள் தீபம்; ஜோதி பிழம்பாக காட்சியளித்த அண்ணாமலையார்

நான்காம் நாள் காட்சியளித்த அண்ணாமலையார் தீபம்

தீபத் திருவிழா நிறைவடைந்து நான்காம் நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 13-ஆம் தேதி அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர் மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது. கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும்.

இந்நிலையில் தீபத் திருவிழா நிறைவடைந்து நான்காம் நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை மீது ஏற்றப்படும் தீப ஜோதி தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதி பிழம்பாக காட்சியளித்தார்.

இதனை அண்ணாமலையார் கோவிலுக்கு முன் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று காலையில் இருந்தே அண்ணாமலையார் தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர் .

தீபத் திருவிழா நிறைவடைந்து 11 நாட்கள் மலை மீது தீபம் ஏற்றப்படும் என்பதால் இந்த 11 நாட்களும் கோவிலில் கூட்டம் இருக்கத்தான் செய்யும், எனவே, வரும் 23ம் தேதி வரை அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது என கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுப்ரமணியர் தெப்பல்

அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் நடக்கும் தெப்ப உற்சவம் சனிக்கிழமை இரவு தொடங்கியது. முதல் நாளான சனிக்கிழமை இரவு  அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஞாயிற்றுக்கிழமை 2-ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெற்றது,

நேற்று திங்கட்கிழமை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்க வில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சுப்ரமணியர் தெப்பல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top