Close
டிசம்பர் 18, 2024 11:17 மணி

பகவான் ரமண மகரிஷி ஜெயந்தி விழாவில் பங்கேற்ற இளையராஜா..!

சிறப்பு அலங்காரத்தில் ரமண பகவான்

பகவான் ரமண மகரிஷி 145 வது ஜெயந்தி விழா திருவண்ணாமலையில் நடைபெற்றது. இதில் இளையராஜா பங்கேற்றார்.

மதுரையை அடுத்த திருச்சுழியில் 30-12-1879-ம் ஆண்டு மார்கழி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். ரமண மகரிஷி .

4வது வகுப்பு வரை திருச்சுழி சேதுபதி பள்ளியில் படித்த வேங்கடராமன், பிறகு மதுரையில் தன் படிப்பை தொடர்ந்து உள்ளார். வேங்கடராமனின் இளம் வயதில்  ஏற்பட்ட அவரது  தகப்பனார் மரணம் அவர் மனதில் பிறப்பு, இறப்பு குறித்த குழப்பங்களை ஏற்படுத்தியது.

கண்களை மூடி ஆழ் தியானத்திற்கு சென்ற ரமணருக்கு கிடைத்த தீர்வு, ‘எங்கும் எதிலும் நிறைந்துள்ள பரமாத்ம தத்துவமே என்னுள் அழிவற்ற ஆத்மாவாக இருந்து செயல்படுகிறது’ என்பதை புரிந்து கொண்ட ரமணர் தம் படிப்பை துறந்து ‘நான் எனது தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவரின் உத்தரவின்படி இவ்விடத்தைவிட்டு கிளம்பி விட்டேன்’ என்று தனது குடும்பத்திற்கு ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டு திருவண்ணாமலையை  நோக்கி தன் தகப்பன் சிவபெருமானை தேடி தன் பயணத்தை தொடங்கினார்.

ரமண பகவானை அடையாளம் காட்டிய ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்

திருவண்ணாமலைக்கு வந்தடைந்த ரமணர் அண்ணாமலையார் கோவிலில் உள்ள பாதாள லிங்கத்தில் பல மாதங்களாக ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார்.

அவரை சுற்றி மண் புத்துக்கள் ஏற்பட்டிருந்தது.அப்போது அங்கு வந்த மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், இதோ திருவண்ணாமலைக்கு கிடைத்துள்ள அற்புத பொக்கிஷம், சிறந்த ஞானி பாருங்கள் என ரமண பகவானை திருவண்ணாமலைக்கு அடையாளம் காட்டினார்.

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.  “ஞான தபோதனரை வாவென்றழைக்கும்” திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரை தரிசித்து ஞானம் பெற்று, சித்தி பெற்றார்.

இவர் அவதரித்த, மார்கழி மாத பூனர்பூச நட்சத்திரத்தன்று, திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஸ்ரீ ரமணாசரமத்தில் ஜெயந்தி விழா, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். அதன்படி, 145 – ம் ஆண்டு ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி ருத்ராபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

முன்னதாக, ஜெயந்தி தின பாராயணம் நடைபெற்றது. பகவான் ரமணரின் பக்தி பாடல்கள் மற்றும் கீர்த்தனைகளை பாடி பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீ ரமணாசிரமம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டன. ஜெயந்தி விழாவில் ஸ்ரீ ரமணாசிரமம் தலைவர் வெங்கட் எஸ்.ரமணன், செயலாளர் சிவதாஸ் கிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

பக்தி பாடல்களைப் பாடிய இசைஞானி இளையராஜா

பக்தி பாடல்களைப் பாடிய இசைஞானி இளையராஜா

ஸ்ரீ ரமண பகவான் ஜெயந்தி நிகழ்ச்சியில் இசை அமைப்பாளரும் ரமண பக்தருமான இளையராஜா கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடினார்.

இசையமைப்பாளர் இளையராஜா, ரமண மகரிஷியின் மகிமையைப் புகழும் வண்ணம் பல பாடல்களை எழுதி தானே அந்தப் பாடல்களுக்கு மென்மையான இசையையும் தந்துள்ளார்.

அவை ஒரு தொகுப்பாக வெளிவந்துள்ளன. “பிக்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்”, “சுற்றுகிற உலகத்திலே”, “விண்ணோர் தொழும்” ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இப்பாடல்களை அவர் நிகழ்ச்சியில் இசைத்த போது பக்தர்கள் மெய் மறந்து ரசித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top