Close
டிசம்பர் 18, 2024 5:01 காலை

தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு

ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்

திருவண்ணாமலை தீபத் திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது.

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரக் கூடிய தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை வேளைகளில் உற்சவா் விநாயகா், சந்திரசேகரா் சுவாமிகளும், இரவு வேளைகளில் உற்சவா் பஞ்சமூா்த்திகளும் மாட வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர்.

ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக அருணாச்சலேஸ்வரர் கோயிலில் 13-ஆம் தேதி அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

சில நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் கொடிமரம் அருகே ஆனந்த நடனம் ஆடினார். அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணை பிளக்கும் கோஷத்தை எழுப்பினர் மகா தீபத்திற்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் திரிக்காக 100 மீட்டர் காடா துணி பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீபத்தை ஏற்ற நாள்தோறும் 2 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. தீபம் ஏற்றப்படும் தீப கொப்பரையானது செம்பினால் செய்யப்பட்டது. கொப்பரையில் ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் எரியும்.

அதைத்தொடர்ந்து, அய்யங்குளத்தில் தெப்பல் உற்சவம் 3 நாட்கள் நடப்பது வழக்கம். அதன்படி, 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளான சனிக்கிழமை இரவு திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது. 2-ஆவது நாளான  ஞாயிற்றுக்கிழமை அய்யங்குளத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல், 3-வது நாளான திங்கள்கிழமை இரவு ஸ்ரீசுப்பிரமணியா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

தீபத் திருவிழா நிறைவு

அதைத்தொடர்ந்து, நேற்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெற்றது.சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தேரடி தெரு, திருவூடல் தெரு,  கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வந்த உற்சவா் சுவாமிகளை திரளான பக்தா்கள் வழிபட்டனா்.

மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் பிரகாசிக்கும். மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும். மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top