Close
டிசம்பர் 18, 2024 6:49 காலை

காவல் துறையை கண்டித்து வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள்

தீபத் திருவிழாவின்போது ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்து திருவண்ணாமலையில் அரசு அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி தொடர்ந்து காலை இரவு சுவாமி ஊர்வலம் மாட வீதியில் சிறப்பாக நடைபெற்றது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கடந்த 13 ஆம் தேதி காலை பரணி தீபமும் மாலை மகா தீபமும் ஏற்றப்பட்டு தீபத் திருவிழா நடைபெற்றது.

இந்த தீபத் திருவிழாவில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த தீபத் திருவிழாவிற்காக பல கட்ட ஆய்வுக் கூட்டங்களை அனைத்து துறை அதிகாரிகளுடன் நடத்தி விழாவுக்கான பணிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

தீபத் திருவிழாவிற்காக டிஐஜிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட எஸ் பிக்கள் தலைமையில் 15,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கார்த்திகை தீபத்தன்று அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் நீதிபதிகள் ,வருவாய் துறை உயர் அதிகாரிகள், வருவாய்த்துறை ஊழியர்கள் என அனைவரையும் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கோயிலுக்கு செல்ல அனுமதிக்காமல் கெடுபிடி காட்டினர். மேலும் ஆட்சியரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அவரை நடந்து செல்லுமாறு கூறியதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதன்மை அதிகாரியான மாவட்ட ஆட்சியரை காவல்துறை அவமதித்து விட்டதாக ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் காவல்துறைக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக காவல் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார துறை தலைவர் சம்பத் தலைமை தாங்கினார்.

அப்போது “கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் தமிழ்நாடு காவல்துறையை கண்டிக்கிறோம், கார்த்திகை தீபத் திருவிழாவில் பணியில் ஈடுபட வந்த ஊரக வளர்ச்சித்துறை வருவாய்த்துறை அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகளை கண்டிக்கிறோம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை தடுத்து நிறுத்தி அத்துமீறி நடந்து கொண்ட காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம், நடவடிக்கை எடு நடவடிக்கை எடு காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு”, என்ற முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகவும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாளுக்கு நாள் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்க தற்போது மாவட்டத்தில் பெரும் பரபரப்பை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது.

தற்போது இந்த விவகாரம் முதல்வர் அலுவலகத்திற்கே சென்றுள்ளதாகவும் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் அலுவலகம் முயற்சி எடுத்துள்ளது என்றும் அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top