தமிழ்நாடு அரசு தையல் கலைஞர்கள்,மண் பாண்டங்கள் செய்பவர்கள் மற்றும் சிற்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு கலை மற்றும் கைவினை தொழில்களில் ஈடுபடும் கைவினை கலைஞர்களுக்கு திறன் பயிற்சி மற்றும் நவீனமயமாக்களுக்கு ஆதரவு அளிக்க கலைஞர் கைவினை திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் :
கலைஞர் கைவினை திட்டத்தினை இந்த ஆண்டு 2024- 2025, முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கட்டட வேலை, மர வேலைப்பாடுகள்,ஜவுளி அச்சிடுதல், நகை வேலைபாடுகள் ,மண்பாண்டங்கள்,சுடுமண் வேலைகள், சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை, துணி வெளுத்தல் மற்றும் தேய்த்தல் போன்ற 25 வகையான கைவினை தொழில் இனங்களுக்கு ரூபாய் 3 லட்சம் வரை வங்கிக் கடன் உதவியுடன் 25% அதிகபட்சமாக ரூபாய் 50,000 வரை மானியத்துடன் கூடிய கடனும் ஐந்து சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டுமே பயன்பெற முடியும். வருமான உச்சவரம்பு இல்லை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் சுய வேலைவாய்ப்பு திட்டங்களின் மூலம் ரூபாய் 1.50 லட்சத்திற்கு மேல் மானியம் பெற்றவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது.
இருப்பினும் மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் மானியம் பெற்றவர்களுக்கு விளக்கு அளிக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், கைபேசி எண்.
இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் அவர்களின் தலைமையிலான தேர்வு குழு தகுதியான விண்ணப்பங்களை தேர்வு செய்து வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும்.
தேர்வு குழுவாள் தெரிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கி, தாய் கோ வங்கி போன்ற வங்கிகளுக்கு கடன் வழங்கிட பரிந்துரை செய்யப்படும்.
வங்கியின் மூலம் கடன் ஒப்பளிப்பு கடிதம் பெற்றவுடன் தொழில் முனைவோர்களுக்கு தொழில் சார்ந்த திறன் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
மேலும் இத்திட்டம் தொடர்பாக கைவினை தொழில் முனைவோர்கள் கூடுதல் தகவல்கள் பெறபொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவண்ணாமலை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.