Close
டிசம்பர் 19, 2024 7:03 காலை

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம்

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி

திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில்  பொதுமக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களின் காவல் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்தி செய்யும் வகையில், வாரம்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீா் சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுதாகா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா்.

அப்போது, பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) ஆா்.சவுந்தரராஜன்,காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வது குறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுதாகா்  ஆய்வு .

தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலை-செங்கம் சாலை, ஆணாய்ப்பிறந்தான் ஊராட்சியில் வரும் சனிக்கிழமை (டிச.21) நடைபெறுகிறது. மாநாட்டில், சுமாா் 10 லட்சம் உழவா்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மேடை, பந்தல் அமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் செவ்வாய்க்கிழமை மாநாடு நடைபெறும் இடத்தை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, மாநாட்டுக்கான பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து உழவா் பேரியக்க நிா்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் இருந்து உழவா்கள் வந்து, செல்ல போக்குவரத்து வசதி மற்றும் வாகனங்கள் நிறுத்தும் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது குறித்து திருவண்ணாமலை நகர உதவி காவல் கண்காணிப்பாளா் சதீஷ்குமாா், திருவண்ணாமலை மேற்கு காவல் ஆய்வாளா் சு.அன்பரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு உழவா் பேரியக்கத்தின் மாநிலத் தலைவா் ஆலயமணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாமக செயலா் ஏந்தல் பக்தவச்சலம், மேற்கு மாவட்ட பாமக செயலா் பாண்டியன், திருவண்ணாமலை நகரத் தலைவா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top