திருவண்ணாமலை மாவட்டம் பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560 அடி உயர பர்வதமலை மீது, உலக பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது.
மலையின் உச்சியில் உள்ள கோயிலை, 3 ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது. பருவதமலை. 5,500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சித்தர்களின் புகழ்பெற்ற, தென் கயிலாயம் என அழைக்கப்படும் மிகப் பழமையான மலையாகும்.
மூலிகை மரங்கள் நிறைந்துள்ள இந்த மலை மலைகளின் அரசன், நவிர மலை என்றும் அழைக்கப்படுகிறது.
பர்வதமலைக்கு படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி என கடுமையான பாதைகளை கடந்து தான் கோயிலுக்கு செல்ல வேண்டும். மேலும், 24 கி.மீ., சுற்றளவு கொண்ட பருவதமலையை பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கமாகும்.
பருவத மலைக்கு கார்த்திகை தீபம், பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் வெளிநாடு என பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்
அவர்கள் மலையேறி தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை கொண்டு சிவனிற்கு அபிஷேகம் செய்து வழிபாடு மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. பருவதமலை கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று நீண்டநேரம் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நாளுக்கு நாள் பர்வத மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மலை ஏற கட்டணம் மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பு
இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை, சார்பில் பர்வதமலை மலை ஏறுவதற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. புதுப்பாளையம் வனச்சரகம் சார்பில் சூழல் மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கட்டணம் கிடையாது. மேலும் பர்வத மலையைச் சுற்றி உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான் பிள்ளைபெற்றாள், அருணகிரி மங்கலம், கோயில் மாதிமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது
பௌர்ணமி நாட்களில் 20 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரம் வரை பக்தர்கள் வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் போடும் குப்பைகளை அகற்றுவதற்கு எங்களிடம் போதுமான ஊழியர்கள் இல்லை.
இந்து சமய அறநிலையத்துறை எங்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. இது பற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட மகா தீப முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்தோம். ஆனால் வழி ஏதும் கிடைக்கவில்லை,
எனவே பக்தர்களிடம் வசூலித்து அந்த பணத்தை கொண்டு ஆட்களுக்கு கூலி வழங்கி சுத்தப்படுத்த உள்ளோம் என தெரிவித்தனர்.
ஜனவரி 1ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் என்ன ?
மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர்.
மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்பட உள்ளது , இந்த நடைமுறை ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, இந்து சமய அறநிலையத் துறையும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கு வனத்துறைக்கு உதவிட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் திட்டத்தைக் கைவிடத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.