காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டதை தொடர்ந்து, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிமாநிலங்களில் இருந்து எளிதாக கொண்டு வரவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்லவும், சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையையும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில், ஒரு வழிச்சாலையாக இருந்த சிங்கபெருமாள் கோயில் ஸ்ரீபெரும்புதூர் சாலை ஒரு வழிச்சாலையில் இருந்து நான்கு வழிச்சாலையாகவும் பின்பு ஆறு வழிச்சாலையாகவம் அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.
அதே போல் இரண்டு வழிச்சாலையான வண்டலூர் வாலாஜாபாத் சாலை நான்கு வழிச்சாலையாகம், பின்பு ஆறு வழிச்சாலையாகவும் அகலப்படுத்தி சீரமைக்கப்பட்டது.
இந்த இரண்டு சாலைகளும் சந்திக்கும் ஒரகடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரகடம் பகுதியில் வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் ரூ.20.82 கோடி மிப்பீட்டில் 620 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒரகடம் மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், கன ரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதாலும் மேம்பாலத்தின் ஒரு பகுதியில் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் சேதமடைந்ததோடு, வாகனங்கள் செல்லும் போது அதிர்வுகள் ஏற்பட்டு வருகிறது.
மேலும் அவ்வபோது சிமென்ட் கலவைகள் உதிர்ந்து கீழே விழுந்து வருவதால் மேம்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததை தொடர்ந்து, ஒரகடம் மேம்பாலத்தை சீரமைக்க ஆலோசனை வழங்க ஐ.ஐ.டி வல்லுனர் குழுவை நெடுஞ்சாலை துறை நாடியுள்ளனர்.
இதையடுத்து சேதமடைந்த ஒரகடம் மேம்பாலத்தை சென்னை ஐஐடி நிறுவனத்தின் பேராசிரியர் அப்பாராவ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை ஸ்ரீபெரும்புதூர் உதவி கோட்டப்பொறியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
இந்த ஆய்வு குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், மேம்பாலத்தை சீரமைப்பது குறித்து ஐஐடி பேராசிரியர் அப்பாராவ் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அவர் தரும் அறிக்கையின் அடிப்படையில் மேம்பாலம் சீரமைக்கப்படும் என்றார்.