திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பத்ரி தர்கா பகுதியில் சித்தேரி உள்ளது. இந்த ஏரியை ஆக்கிரமிப்பு செய்து காட்டுநாயகன் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக ஏறி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அவரால் பன்றிகளை சரிவர பராமரிப்பு செய்ய முடியவில்லையாம். இதனால் ஏரியின் மதகை கடப்பாரை மூலம் உடைத்ததாக கூறப்படுகிறது.
அவரிடம் கிராம பொதுமக்கள் ஏரியின் மதகை ஏன் உடைத்தீர்கள் என்று கேட்டபோது அவர் தகாத வார்த்தைகள் பேசி கடப்பாரை மூலம் குத்த வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பன்றிகள் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து விடுவதாகவும், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டில் இருக்கும் பொருட்களை தின்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர் .
மேலும் பன்றிகளால் பலவித நோய்கள் பரவுவதால் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஏரியின் மதகை உடைத்த காட்டுநாயகன் தெருவை சேர்ந்த குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம பொதுமக்கள் வந்தவாசி ஆரணி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்தவாசி போலீஸ் டிஎஸ்பி கங்காதரன் மற்றும் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மதகை கடப்பாரை கொண்டு குமார் உடைக்கும் வீடியோ ஆதாரத்தை போலீசாரிடம் பொதுமக்கள் காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் றுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்