நாமக்கல் :
மதுரையில் நடைபெற உள்ள மாநில அளவிலான சீனியர் தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (டிச.,20ம் தேதி) விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட சீனியர் தடகள சங்கம் சார்பில், அதன் செயலாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துறை மைதானத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான மாநில சீனியர் தடகள சாம்பியன் போட்டி வருகிற ஜன. 3,4,5 ஆகிய தேதிகளில் மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
போட்டியில் 30 வயதுக்கு மேற்பட்டோர் முதல் 100 வயது உள்ளவர்கள் வரை கலந்து கொள்ளலாம். ஒரு நபர் மொத்தம் 3 போட்டிகளில் கலந்துகொள்ளலாம். தகுதியுடைய தடகள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது போட்டோ, ஆதார்கார்டு மற்றும் வயது சான்றிதழுடன் நாளைக்குள் (டிச.,20ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.
100 மீ., 200 மீ., 800 மீ., 1,000 மீ., 5,000 மீ., மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற உள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 93627-22283 என்ற எண்ணில் நாமக்கல் மாவட்ட சீனியர் தடகள சங்கத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.