Close
ஏப்ரல் 2, 2025 3:34 காலை

மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்ல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார், கோடகநல்லுார் பகுதிகளில் கேரள மாநிலம், திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அபாயகரமான மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. இதையடுத்து, சுத்தமல்லி போலீசார் புதிய குற்றவியல் சட்டம் 271, 272 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில், தலைமை ஏஜென்ட் ஆக செயல்பட்ட சுத்தமல்லியைச் சேர்ந்த மனோகர்(51), மாயாண்டி(42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்.பி., சிலம்பரசன் கூறியுள்ளார்.

லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு கழிவுகளை கொட்டியதும், இதற்கான இடங்களை இவர்கள் அடையாளம் காட்டியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இது குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:

 திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும்.  கேரளாவுக்கு கொண்டு செல்லாவிட்டால் குப்பை மேலாண்மை நிறுவனத்திடம் கேரளா அரசே ஒப்படைக்க வேண்டும்.  கழிவுகளை கேரளா கொண்டு செல்லலாம் அல்லது திருநெல்வேலி நிறுவனத்திடம் வழங்கலாம். திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு கேரளாவே பொறுப்பேற்க வேண்டும்.  கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top