திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்கோயில் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் ரூ. 2.83 கோடி செலுத்தியுள்ளனர்.
பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடியது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அண்ணாமலையார் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
ரூ. 2.83 கோடி ரொக்கம்
மாதம்தோறும் அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கார்த்திகை தீப பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை நடைபெற்றது.
கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஜீவானந்தம், இணை ஆணையா் ஜோதி ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, கோயில் உண்டியலில் 2 கோடியே 83 லட்சத்து 92 ஆயிரத்து 520 யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 164 கிராம் தங்கம், 1.020 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அண்ணாமலையார் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
தங்கம், வெள்ளி ஆகியவை கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததால் உண்டியல் காணிக்கைப் பணம் அதிகமாக வந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட சில உண்டியல்களில் சேகரமாகி இருந்த காணிக்கை பணம் மட்டுமே வியாழக்கிழமை எண்ணப்பட்டது. மீதமுள்ள உண்டியல்களை எண்ணும் பணியை வரும் 30-ஆம் தேதி நடத்த கோயில் நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டாக ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் சுமார் ரூ. 2 கோடிக்கும் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது.