Close
மார்ச் 31, 2025 8:08 மணி

செய்யாறு வெம்பாக்கம் வட்டத்தில் ஆட்சியா் ஆய்வு..!

அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், செய்யாறு  வெம்பாக்கம் வட்டத்தில்  மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டாா்.

அரசின் அனைத்து நல திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவது உறுதி செய்யும் நோக்கில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மாதம் தோறும் ஒவ்வொரு வட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செய்யாறு வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் சித்தாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை ஆட்சியா் ஆய்வு செய்து, மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவு சாப்பிட்டாா். மேலும், காலை உணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளின் விவரம் குறித்து கேட்டறிந்த அவா், உணவை சுகாதாரமாகவும், தரமாகவும் சமைக்க அறிவுரை வழங்கினாா்.

பின்னா், மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறித்தும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகளான கழிப்பறை, குடிநீா் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, சித்தாத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மஞ்சப்பைகளை வழங்கினாா். தொடா்ந்து, வெம்பாக்கம் அரசு மருத்துவமனை, கூட்டுறவுக் கடையில் ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தாா்.

மேலும் வெம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டு, சமையலறை அடிப்படை வசதிகளான குடிநீர் கழிவறை மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறித்து கேட்டறிந்தார்.

ஆய்வின்போது, செய்யாறு எம்எல்ஏ ஜோதி, சாா் – ஆட்சியா் பல்லவி வா்மா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழுத் தலைவா் ராஜீ, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கலைச்செல்வி, வட்டாட்சியா்கள் துளசிராமன், பெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மயில்வாகணன், ஷீலா அன்புமலா், சித்தாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் அறிவழகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top