ரயில்வே துறையில் காலி பணியிடங்களுக்கு அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், என திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் பேசினார்.
நாடாளுமன்றத்தில் திருவண்ணாமலை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை பேசியதாவது;
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு தமிழ்நாடு ரயில்வே துறையை முற்றிலும் புறக்கணித்து வருகிறது. குறிப்பாக தென்னக ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் ரூபாய் 71 லட்சம் கோடி வருவாய் ஈட்டி தருகிறது.
அதில் 2.5 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீட்டாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு திருவண்ணாமலை திண்டிவனம் புதிய ரயில் பாதை திட்டம் கடந்த 2006 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு 2008இல் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் 2011 க்கு பிறகு பணிகள் நிறுத்தப்பட்டு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்த திட்டத்திற்கு ரூபாய் 750 கோடி ஒதுக்குவதாக அறிவித்தனர்.
ஆனால் 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு அறிவித்தனர். அதில் திண்டிவனம் திருவண்ணாமலை ரயில் பாதை திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை என பேசினார். மேலும் மத்திய அரசு நிதி ஒதுக்குவதிலும் திட்டங்களை அனுமதிப்பதிலும் தமிழ்நாட்டை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டி பேசினார்.
மேலும் திருவண்ணாமலையில் பௌர்ணமி அன்று 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் தீபத் திருவிழாவிற்கு 40 லட்சம் பக்தர்களும் வரும் நிலையில் சென்னையில் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒரு எக்ஸ்ப்ரஸ் ரயில் கூட இயக்கவில்லை என தெரிவித்தார்.
மேலும் ஜோலார்பேட்டை ,திருவண்ணாமலை ,திருப்பத்தூர் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் காலதாமதம் ஆகிறது, எனவே ரயில் துறை காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ரயில்வே வருமானம் மட்டுமின்றி ஜிஎஸ்டி வருமான வரி ஆகியவற்றிலும் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது, எனவே தமிழ்நாடு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து திருவண்ணாமலை உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வரும் ஆன்மீக பக்தர்களின் வசதிக்காகவும் சுற்றுலா மேம்பாட்டிற்காகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அவர்களை சந்தித்து ரயில்வே துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வழங்கி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினார்.