பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதியாண்டில் மட்டும் இதுவரை 70 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.8 கோடி வரை கடன் வழங்கியிருப்பதாக காஞ்சிபுரம் கிளையின் முதன்மை மேலாளர் மணிகண்டன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஸ்டேட் வங்கி கிளைகளில் ஆண்,பெண் மற்றும் இரு பாலரும் இணைந்து குழு சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். 10 முதல் 20 உறுப்பினர்கள் ஒரு குழுவில் இருந்தாலே போதுமானது.
குழு நபர்கள் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் வங்கிப் புத்தகத்தை அவர்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கே கொண்டு போய் கொடுத்து வருகிறோம்.
குழு சேமிப்பில் அதிக பட்சம் ரூ.20 லட்சமும், தனி நபராக இருந்தால் ரூ.4 லட்சம் வரையும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
சுய தொழில் மற்றும் கூட்டுத் தொழில் முனைவோர்களுக்கு பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறோம்.
இதுவரை இந்த நிதியாண்டில் மட்டும் 100 குழுக்களுக்கு மேலாக சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
70க்கும் மேற்பட்ட குழுக்களுக்கு ரூ.8 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. தவணைக்கடன், மூலதனக்கடன் ஆகியனவும் வழங்கி ஸ்டேட் வங்கி மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறப்பான சேவை வழங்கி வருவதாக தெரிவித்தார்.