நவம்பர் மாதம் ஏப்ரல் மாதம் ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். தற்போது கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.
கடலோரப் பகுதிகளில் அரிய வகையைச் சோ்ந்த ஆமைகள் முட்டையிட்டு கடலுக்குள் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்த வகை ஆமைகள் முட்டையிடுவதற்காகவே ஆண்டுதோறும் கடலில் நீண்ட தூரம் கடந்து இங்கு வருகின்றன.
ஆமைகளால் இடப்படும் முட்டைகளை மனிதா்கள் சிலா் உணவுக்காக எடுத்து பயன்படுத்துகின்றனா். மேலும், நரி, நாய் உள்ளிட்ட விலங்குகளும் ஆமை முட்டைகளை தோண்டி எடுத்து உண்டுவிடுகின்றன. இதனால், ஆமை இனம் அழியும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, இயற்கை ஆா்வலா்கள் ஆமை முட்டைகளைச் சேகரித்து, அவற்றை பொறிக்க வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனா்.
ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்க காலத்தில், கடற்கரையில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளை அடைகாத்தலுக்காக, வனத்துறையினர் சேகரிப்பது வழக்கமாகும்.
இந்த ஆண்டுக்கான ஆமைகளின் இனப்பெருக்க காலம் தொடங்கியுள்ள நிலையில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திண்டிவனத்தில் உள்ள வசவன்குப்பம் கடற்கரையில் ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமைத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு 2 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.