Close
டிசம்பர் 24, 2024 2:33 காலை

அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை : அமைச்சரிடம் எம்.பி. வேண்டுகோள்..!

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியை அனுமதிக்க எம்.பி. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல்:
அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம், ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார்.

நாமக்கல்லில் :இருந்து கத்தார், ஓமன், துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு பல ஆண்டுகளாக கோழி முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது திடீரென்று கத்தார் மற்றும் ஓமன் நாடுகளில் முட்டை இறக்குமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் நாமக்கல் பகுதியில் இருந்து ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான முட்டைகள், தற்போது அந்நாட்டின் துறைமுகத்தில் இறக்கப்படாமல் கப்பலில் உள்ளது.

நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை உடனே இறக்குமதி செய்திடவும் அதேபோன்று கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கிடவும், கோழிப்பண்ணையாளர்கள் மற்றும் முட்டை ஏற்றுமதியாளர்கள், ராஜ்யசபா எம்.பி., நாமக்கல் ராஜேஷ்குமாரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.

இதையெட்டி, நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி சேர்மன், ராஜேஷ்குமார் எம்.பி., டில்லியில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, அரபுநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறி, முட்டை ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ஒமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகளை துறைமுகத்திலிருந்து இந்த வார இறுதிக்குள் இறக்குமதி செய்திட நடவடிக்கை எடுப்பதாகவும் மற்றும் கத்தார் நாட்டில் முட்டை ஏற்றுமதியில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க, இம்மாதம் அவர் கத்தார் நாட்டிற்கு செல்லும்போது அந்நாட்டு அமைச்சருடன் பேசுவதாகவும் அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக, ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top