Close
டிசம்பர் 23, 2024 5:16 மணி

50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : ஈரோட்டில் முதலமைச்சர் வழங்கினார்..!

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஸ்கூட்டி வழங்கிய முதலமைச்சர்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.951.20 கோடி மதிப்பிலான 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133.66 கோடி மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.284.02 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 50,088 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.20) வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஈரோடு சோலாரில் இன்று (டிச.20) நடைபெற்ற அரசு விழாவில், ரூ.951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 559 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 222 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தின் 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.482 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம், வைராபாளையம் உரக்கிடங்கில், ரூ.1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் இரண்டாவது அலகு, ஈரோட்டில் சுதந்திர தின வெள்ளி விழா பேருந்து நிலையத்தில் ரூ.45 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் மற்றும் பேருந்து நிழற்கூடங்களுடன் கூடிய மேம்பாட்டுப் பணிகளை திறந்து வைத்தார்.

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.6 கோடியே 99 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தினசரி அங்காடி கட்டடம், அந்தியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் ரூ.91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்துடன் கூடிய கடைகள், ரூ.6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 28 பூங்காக்கள், ரூ.1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பொது நூலகக் கட்டடங்கள், ரூ.71 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 107 இடங்களில் சாலைப் பணிகளை திறந்து வைத்தார்.

உயர்கல்வித் துறை சார்பில், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் ரூ.1 கோடி ரூபாய் செலவில் அயல்நாட்டு மொழிகள் கற்பித்தல் மையம் மற்றும் ரூ.8 கோடியே 54 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்விளையாட்டரங்கத்தை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ரூ. 44 கோடியே 42 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 179 பணிகளை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில், ரூ.24 கோடியே 78 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவில் 36 உயர் வருவாய் பிரிவு பன்னடுக்கு மாடி குடியிருப்புகள், 6 வாரிய வாடகை கடைகள் மற்றும் அலுவலக வளாகக் கட்டடம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், பவானி சாலை பகுதி-1 நிலை-2 திட்டப்பகுதியில் ரூ.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

கோபி வட்டம், ஜெ ஜெ நகர் கொளப்பலூர் திட்டப்பகுதியில், ரூ.9 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள், நேதாஜி நகர் திட்டப்பகுதியில் ரூ.53 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 528 அடுக்குமாடி குடியிருப்புகள்,

பெருமுகை திட்டப்பகுதியில் 13 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 144 அடுக்குமாடி குடியிருப்புகள், செம்பான்கரடு திட்டப் பகுதியில் ரூ.27 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 272 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், உத்தமத் தியாகி அய்யா ஈஸ்வரனுக்கு பவானிசாகரில் ரூ.3 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், கணக்கம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் புதிய திருக்குளம், தங்கமேடு தம்பிகலை ஐயன் சுவாமி கோயிலில் ரூ.26 லட்சம் ரூபாய் மதிப்பில் வணிக வளாகமத்தை திறந்து வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், வடக்கு புதுப்பாளையம், கொரவம்பாளையத்தில் ரூ.65 லட்சம் ரூபாய் மதிப்பில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள், பள்ளிக் கல்வித் துறை சார்பில், சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் ரூ.2 கோடியே 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பத்து வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம்,

தொட்டம்பாளையம், குஜ்ஜம்பாளையம், தாசப்பகவுண்டன் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.64 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைகள் துறை சார்பில், ஈரோடு வெளிவட்ட சுற்றுசாலையில் ரூ.59 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பில் குறுக்கு வடிகால், தடுப்புச் சுவர், மையத் தடுப்பானுடன் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட பணிகள், ஈரோடு – கரூர் சாலையில் ரூ.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சிறுபாலத்துடன் இருவழித் தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைத்தார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், சித்தோடு, நம்பியூர், தாளவாடி ஆகிய இடங்களில் ரூ.11 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், புஞ்சைகாளமங்கலம் கிராமம், சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்,

சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ரூ.6 கோடி ரூபாய் மதிப்பில் 1000 மெ.டன் கிடங்குகள், வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வெள்ளாங்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் ரூ.5 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 250 மெ.டன் குளிர்பதனக் கிடங்குகளை திறந்து வைத்தார்.

புத்தூர் புதுப்பாளையத்தில் ரூ.2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த விதைச் சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்பு அலுவலக வளாகம், அந்தியூரில் ரூ.2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம், பர்கூர், கேர்மாளம் ஆகிய இடங்களில் 1 கோடி ரூபாய் செலவில் துணை வேளாண்மை விரிவாக்க மையங்கள்,

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பூலப்பாளையம், ஜி.எஸ்.காலனி, அந்தியூர் காலனி ஆகிய அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் ரூ.1 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்,

தலமலை கிராமம் மாவனத்தம் பழங்குடியினர் நல காலனியில் 81 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தார் சாலை என மொத்தம், 951 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 559 முடிவுற்றப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

நீர்வளத்துறை சார்பில், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் ரூ.2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடப்பள்ளி, அம்மாபாளையம் கிளை வாய்க்கால் புனரமைக்கும் பணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில்,

ஈரோடு, ரங்கம்பாளையம் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நலக் கல்லூரியில் ரூ.9 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதிக் கட்டடம், எம்மாம்பூண்டியில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கிராம பயிற்சி மையக் கட்டடத்தை திறந்து வைத்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில், ஜெயராமபுரத்தில் ரூ.4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில், ரூ.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பவானி சங்கமேஸ்வரர் கோயிலின் காவேரிக் கரை படித்துறையை மேம்படுத்தும் பணி, பெண்கள் உடை மாற்றும் அறை மேம்படுத்துதல் மற்றும் புதிதாக கழிவறை கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், பயிர் கடன், சிறு வியாபாரிகளுக்கான கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், சத்யவாணிமுத்து அம்மையார் இலவச தையல் இயந்திர திட்டம்,

திருமண உதவித் திட்டம், முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் உதவிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மோட்டார் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், சக்கர நாற்காலிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 50,088 பயனாளிகளுக்கு ரூ.284 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி,

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ப. செல்வராஜ், கே.இ.பிரகாஷ் (ஈரோடு), கே.சுப்பராயன் (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி. வெங்கடாசலம் (அந்தியூர்), சி. சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top