திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்காபுரம் ஊராட்சியில் உள்ள நவாப் பாளையம் முதல் அய்யப்பன் நகர் பகுதி வரை ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை மூலம் மழை நீர் வடிநீர் கால்வாய் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார் உதவிக்கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் ராஜீவ் காந்தி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது;
நான் நாடாளுமன்றத் தேர்தலில் இப்பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த போது இப்பகுதி மக்கள் என்னிடம் மழை வடிகால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் புயலில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில் மீட்டு அவருக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் அமைத்துக் கொடுத்து மழை முடிந்தவுடன் உடனடியாக உங்களுக்கு இந்த பணி அமைத்து தரப்படும் என்று கூறி இருந்தேன்.
தற்போது நெடுஞ்சாலைத் துறை மூலம் கெங்காபுரம் ஊராட்சியில் உள்ள நவாப் பாளையம் முதல் ஐயப்பன் நகர் வரை ரூபாய் 1.15 கோடியில் புதிய மழை வடிநீர் கால்வாய் அமைப்பதற்கு தற்போது பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும் மழைக் காலங்களில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு கால்வாய் மூலம் மழை நீர் அனைத்தும் செல்வதற்கு அனைத்து வசதிகளையும் அமைத்துக் கொடுக்கப்படும் . மக்கள் வைத்த கோரிக்கைகள் உடனுக்குடன் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது என சரவணன் எம்எல்ஏ பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள், கூட்டமைப்பு தலைவர் வித்யா பிரசன்னா, அரசு ஒப்பந்த காரர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ,ஒன்றிய குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், கிராம பொதுமக்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.