Close
டிசம்பர் 22, 2024 11:01 மணி

விளைநிலங்களில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்? அன்புமணி ராமதாஸ் கேள்வி

அன்புமணி ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் பாமக சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது;

தமிழ்நாட்டில் சமீபகாலத்தில் இப்படி ஒரு உழவர் மாநாடு நடந்தது கிடையாது. இந்த மாநாட்டை யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக நடத்தவில்லை. மாறாக உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படுகிறது. எங்களைப் போன்று தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் கிடையாது. உழவர்கள் பற்றி அரசியல் கட்சிகளுக்கு கவலை கிடையாது. ஆளும் திமுக ஆட்சி முதலாளிகளுக்காக நடத்தப்படும் ஆட்சி.

இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்துகின்ற சக்தி நமக்கு மட்டும் தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்றால், 2, 3 மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள். அதேபோல், இத்தனை விவசாயிகளும் சென்னை நோக்கி செல்ல வேண்டும். உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள். அதுதான் என் ஆசை. சோறு போடும் கடவுள் விவசாயிகள்.

விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து புரிந்து கொண்ட ஒரே கட்சி பாமக தான். திமுக அரசு முதலாளிகள் பக்கம் உள்ளது. பாமகவின் போராட்டத்தால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதுகாக்கப்பட்டன. நந்தன் கால்வாய் திட்டம் அமைக்க 45 ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வருகிறது.

விவசாய நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து, அதன் மூலம் மக்களுக்கு அறிவு வளர்க்க உள்ளனராம். விளை நிலங்களை அழித்து அறிவுசார் நகரம் அமைக்க வேண்டுமா? பரந்தூரில் விமான நிலையம் நிச்சயம் வரக்கூடாது. விமான நிலையம் திருப்போரூரில் தான் அமைய வேண்டும், விளைநிலங்களை இதுபோன்று அழிக்க முயன்றபோது, அவற்றை தடுத்தது பாமக மற்றும் அய்யா ராமதாஸ் தான்.

மக்கள் போராடுவதால் தொழிற்சாலையை கொண்டு ஆகாயத்தில் அமைக்க முடியுமா? என ஒரு அமைச்சர் கேட்கிறார். அவர் அமைச்சர் அல்ல, அவர் ஒரு வியாபாரி. விளைநிலங்களில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்? ஆகாயத்தில் இருந்து உணவு வருமா?

முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பாவப்பட்ட ஜென்மங்களாக உள்ளனர். கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நாங்க பாவம் பண்ணவங்களா?

முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன். “சென்னையில் வெள்ளம் வந்தது. சென்னை மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 6000 ரூபாய் கொடுக்கிறீர்கள். தென்காசி, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தது. சென்னை மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 6000 ரூபாய் கொடுக்கிறீர்கள். ஆனால், கடலூரில் வெள்ளம் வந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் வெள்ளம் வந்தது. ஆனால், 2000 ரூபாய் மட்டும் கொடுக்கிறீர்கள்.

சென்னை மக்கள் மட்டும் புண்ணியம் பண்ணவர்கள். விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பாவம் பண்ணியிருக்கிறார்களா? முதலமைச்சர் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.  விளைபொருள் கொள்முதல் ஆணையம் அமைக்க வேண்டும்.

அனைத்து விளைப்பொருள்களும் உரிய விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். தற்போது நடக்கும் இந்த கூட்டம் வெறும் சாம்பிள் தான். தமிழ்நாட்டை பாதுகாக்க பாமகவுக்கு அதிகாரம் முக்கியமான ஒன்று. அதனால் விவசாயிகள் அனைவரும் பாமகவுக்கு ஆதரவு தாருங்கள், என அன்புமணி ஆவேசமாக பேசினார்.

மாநாட்டில் அன்புமணி ராமதாசுக்கு நினைவுபரிசு வழங்கிய விவசாயிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top