Close
டிசம்பர் 23, 2024 5:12 மணி

சென்னையில் விரைவில் முற்றுகைப் போராட்டம்: மருத்துவா் ராமதாஸ் அறிவிப்பு

மாநாட்டில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சாலையில் பாமக சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி ராமதாஸ், ஜிகே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது;

உலகிற்கு உணவளிக்கும் உழவர்கள் தான் கடவுள், நான் அடிப்படையில் ஒரு விவசாயி. நான் என்னை அடிப்படையில் உழவர் என்றே தற்போதும் அறிமுகப்படுத்திக்கொள்வேன்.  திராவிட மாடல் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளைப் படுகுழியில் தள்ளியது திராவிட மாடல் அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வேளாண் கல்வி ஊக்குவிக்கப்பட்டு, விளைபொருட்களுக்கு அரசே கொள்முதல் செய்து உரிய விலையை கொடுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும். வேளாண்மைக்கு முன்னுதாரணமாக இஸ்ரேல் இருக்கிறது. தண்ணீரே இல்லாத இஸ்ரேல் விவசாயத்தில் சாதித்து கொண்டிருக்கிறது. 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை இஸ்ரேல் நட்டிருக்கிறது. அந்த இஸ்ரேல் மாடல், தமிழகத்திற்கு வேண்டும். வறட்சியாலும் வெள்ளத்தாலும் தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. உழவர்கள் வருமானத்தை அதிகரிக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படாமால் இருந்து வருகிறது. தமிழகத்தில் ஏற்படும் வறட்சி செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஒன்றாகும். தண்ணீர் மேலாண்மையில் தமிழ்நாடு கீழே இருப்பது என்பது கவலையளிக்கிறது. ஆற்று மணல் கடத்தலை தமிழக அரசு தடுக்க வேண்டும். மணல் வியாபாரத்தை அரசு தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் ஆறுகள் மரணிக்கும்.  தமிழகத்தில் விவசாயிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.

மேலும், உலகில் எந்த பொருளை ஒருவர் உருவாக்கினாலும் அதற்கு விலையை அவர் தான் நிர்ணயம் செய்கிறார். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கு மட்டும் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு விவசாயிங்கள் விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. விவசாய விளை பொருட்களை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி பேசினார்.

திருவண்ணாமலையில் நடைபெறுவது விவசாயிகள் மாநாடு. அடுத்ததாக, சென்னையில் போா் நினைவுச் சின்னம் அருகே விவசாயிகளின் நலன் காக்கும் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முற்றுகைப் போராட்டம் நடைபெறும். அதற்கான தேதியை விரைவில் அறிவிப்பேன். விவசாயிகள் எல்லாரும் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top