Close
டிசம்பர் 23, 2024 3:39 காலை

தண்டராம்பட்டு ஒன்றியத்தில் ஆட்சியர் கள ஆய்வு

குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டஆட்சியர் பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு அரசு கிராமப்புறங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராதாபுரம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதியதாக கட்டப்பட்டு வரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து பதினைந்தாவது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆய்வு மேற்கொண்டு, ராதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அகரம் கிராமத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை இடித்துவிட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து சே கூடலூர் ஊராட்சியில் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதியதாக அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தும் , புதியதாக  கிராம நிர்வாக அலுவலகம் கட்டுவதற்கான இடத்தினை பார்வையிட்டும்,  அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்து விகிதம் குறித்தும் , குழந்தைகளின் வருகை விபரங்கள் குறித்தும் , குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவினை உண்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது புதிதாக மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் தரமாகவும் விரைவாகவும் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை முகமை இயக்குனர் மணி, உதவி இயக்குனர் ஊராட்சிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top