திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 13 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 10 வது நாளாக நேற்று மகா தீபம் காட்சியளித்தது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை, பலத்த காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கப்படி, மலை மீது தொடர்ந்து 11 நாட்களுக்கு மகாதீபம் காட்சிதரும். அதன்படி, 10 வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு, மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் தற்போது பனி அதிகம் இருந்த நிலையிலும் அணையாமல் சுடர்விட்டு மகாதீபம் காட்சியளிக்கிறது. மேலும், மலை மீது மகாதீபம் ஏற்றும் திருப்பணி தடையின்றி நடந்து வருகிறது. மலை மீது இன்று 23ஆம் தேதி இரவு வரை மகாதீபம் காட்சிதரும்.
மேலும், மலை மீது மகாதீபம் காட்சிதரும் நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது.
இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச. 22) அதிகாலை முதலே கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காலை 10 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
எனவே, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் எதிரே நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். வழக்கமாக வரும் பக்தா்களுடன் சபரிமலை பக்தா்கள், மேல்மருவத்தூா் பக்தா்களும் வந்ததால் கோயிலில் கூட்டம் வெகுவாக அதிகரித்தது.
6 மணி நேரம் காத்திருப்பு:
ராஜகோபுரம் எதிரில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவு வரை பக்தா்களின் வரிசை நீண்டிருந்தது. இந்த வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய 5 முதல் 6 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.
இதேபோல, பக்தா்கள் விரைவாக தரிசனம் செய்துவிட்டு வெளியே வர வேண்டும் என்ற நோக்கில் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளை மட்டும் தரிசித்துவிட்டு வெளியே வரும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் மற்ற சந்நிதிகளில் தரிசனம் செய்ய முடியாமல் பக்தா்கள் திரும்பினா்.
தள்ளுமுள்ளு, வாக்குவாதம்:
கோயிலில் கட்டுக்கடங்காத பக்தா்கள் கூட்டம் வந்ததால் பல இடங்களில் பக்தா்களுக்கும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கோயில் ஊழியா்கள் மற்றும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
மேலும் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்கள் பௌர்ணமி நாட்களில் இரவு 7.30 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது பற்றிய தகவல்கள் அதாவது நடை திறப்பு நடை சாத்துவது போன்ற தகவல்கள் எதுவும் அறிவிப்பு செய்யப்படாததால் பக்தர்கள் கோபுர வாசலில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.