Close
டிசம்பர் 23, 2024 2:35 மணி

திருவண்ணாமலை அருகே பல கோடி மதிப்புள்ள முருகர் கிருஷ்ணர் சிலைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள்

திருவண்ணாமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்பிலானதாகக் கூறப்படும் முருகன் சிலை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை ஆகியவற்றை விற்க முயன்ற, 2 பேரிடம் வனவிலங்கு குற்றத் தடுப்பு பிரிவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிலை கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வன விலங்கு குற்றப்பிரிவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில், திருவண்ணாமலையை அடுத்த கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வெங்கடேஷ், ராஜசேகா். இவா்கள் இருவரும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முருகன் சிலை, யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கிருஷ்ணா் சிலை ஆகியவற்றை விற்க முயற்சி செய்வதாக சென்னையில் உள்ள வன விலங்கு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து வந்த வன விலங்கு குற்ற தடுப்புப் பிரிவு அதிகாரி காா்த்திகேயன் தலைமையிலான வனத் துறையினா், திருவண்ணாமலை – மணலூா்பேட்டை சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு சிலைகளை வாங்குபவர்கள் போல வனத்துறையினர் நடித்துள்ளனர். கடந்த 2 நாட்களாக பிடி கொடுக்காமல் நழுவி வந்த மர்ம நபர்கள், நேற்று சிலைகளை விற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

அதன்படி, ரூ.25 கோடி மதிப்பிலான நவபாஷாண முருகர் சிலை மற்றும் ரூ.30 லட்சம் மதிப்பிலான யானைத் தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவை தங்களிடம் இருப்பதாகவும், பணத்துடன் நேரில் வந்தால் சிலைகளை காண்பிப்பதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, மத்திய வனக்குற்ற தடுப்பு கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் சிலைகளை வாங்குவது போல அங்கு சென்றனர். அங்கு சுமார் 10 கிலோ எடையுள்ள நவபாஷாண முருகன் சிலை மற்றும் ஒரு அடி உயரமுள்ள யானை தந்தத்தால் வடிவமைக்கப்பட்ட கிருஷ்ணர் சிலை ஆகியவற்றை காண்பித்துள்ளனர்.

தொடர்ந்து அங்கு சுற்றியிருந்த வனத்துறையினர் அதிரடியாக கண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், வெங்கடேசனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதாக கூறப்படும் முருகர் சிலையை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதன்பிறகே, இதன் உண்மை தன்மை தெரியவரும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் சுவாமி சிலைகள் கடத்தல் கும்பலில் தொடர்புடையவர்கள் பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருப்பது தெரியவந்ததுள்ளது. அவர்களை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top