தமிழகத்தில் சமீப காலமாக போதை மாத்திரை புழக்கத்தில் இருந்து வருகிறது. வலி நிவாரணி மாத்திரைகளை ஊசியில் ஏற்றி போதை ஏற்றும் கலாச்சாரம் தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் இளைஞர்களிடையே இருந்து வருகிறது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களிலும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர்களை கைது செய்து வருகிறது.
இந்த நிலையில் கல்லூரிகள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இவர்களது பார்வை திரும்பியது. சமீபத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த 3 நபர்களை கடந்த நவம்பர் மாதம் காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது மும்பையில் இருந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் பகுதியில் மும்பையில் இருந்து அடிக்கடி கொரியர் வருகிறது என்ற தகவல் கிடைத்தது.
அத் தகவலின் பேரில் அனுப்புநர் முகவரியை வைத்து விசாரணை மேற்கொண்டதில் மும்பையை சேர்ந்த AIPEX WORLDWIDE SURFACE COMPANY என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து கொரியர் வந்தது தெரிய வந்தது.
மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் மும்பையில் தலைமறைவாக இருந்த மருந்து நிறுவன நிர்வாக இயக்குனர் சதானந்த் பாண்டே, புனே அருகே தலைமறைவாக இருப்பது தெரிந்த நிலையில் அங்கு விரைந்த காவல்துறையினர் மருந்து நிறுவன உரிமையாளர் சதானந்த் பாண்டே வை கைது செய்தனர்.
அங்கிருந்து தனி விமானத்தில் அழைத்து வரப்பட்ட சதானந்தை ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த போதை மாத்திரையை விற்பனை செய்ததும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு அதிக அளவில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேற்படி சதானந்த் பாண்டே மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பினர்.