நாமக்கல் :
தமிழகத்தில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள, பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களுக்கான கலந்தாய்வை உடனே நடந்தி, பணி நியமன உத்தரவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றோர், நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
2023-24ம் ஆண்டிற்கான, தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள, 3,192 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, தமிழக ஆசிரியர் தேர்வுவாரியம், 2023ம் ஆண்டு அக்டோபரில் வெளிட்டது. இதற்கான போட்டித்தேர்வு கடந்த, பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது.
தொடர்ந்து, மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில், நாங்கள் தேர்ச்சி பெற்றோம். ஜூனில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும் பங்கேற்றோம். கடந்த, ஆகஸ்ட் மாதம், வெளியிட்ட உத்தேச தேர்வுப்பட்டியலில், நாங்கள் இடம் பெற்றுள்ளோம்.
உத்தேச தேர்வுப்பட்டியல் வெளியிட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும், எங்களுக்கு இதுநாள் வரை கலந்தாய்வு நடத்தி பணி நியமன உத்தரவு வழங்கவில்லை. ஆனால், எங்களுடன் தேர்ச்சி பெற்று ஆதிதிராவிடப் பள்ளிகளுக்கு தேர்வாகிய ஆசிரியர்கள், பல நாட்களுக்கு முன்பே பணியில் சேர்ந்துவிட்டனர்.
மேலும், பட்டதாரி ஆசிரியர்களை நிரப்புவதற்கான இத்தேர்வு, 10 ஆண்டுகளுக்கு பின் நடந்ததால், தனியார் பள்ளியில் வேலை பார்த்த பலர் வேலையை விட்டு வந்து படித்து தேர்ச்சி பெற்றோம். தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களில் அதிகமானோர், 45 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
அவர்களின் பணிக்காலமும் மிகவும் குறைவு. தற்போது மீண்டும், தனியார் பள்ளிகளிலும் பணியில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எங்களின் குடும்ப வாழ்வாதாரம் கருதி, எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனருக்கான கலந்தாய்வை உடனே நடத்தி, பணி நியமன உத்தரவுகளை வழங்க பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்தரை செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.