நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்கப்படும் என மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் பேசினார்.
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், தேசிய நுகர்வோர் தின விழா நடைபெற்றது.
மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை மொத்தம் 1,107 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை, கடந்த 21 மாதங்களில் 462 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் கோயம்புத்தூரில் இருந்து விரைவான விசாரணைக்காக மாற்றலாகி வந்த 128 வழக்குகளில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2023 மார்ச் மாதத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. தற்போது வழக்கு தாக்கல் செய்து ஓராண்டுக்கு மேல் 7 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், தற்சமயம் மொத்தம் 119 வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு வழக்கும் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். விரைவில் நிலுவையில் உள்ள வழக்குகள் தீர்க்கப்படுவதோடு, இனிமேல் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை 3 மாதங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடந்த நிதியாண்டில் சமரச பேச்சுவார்த்தை மூலம் தமிழகத்தில் அதிக வழக்குகளை தீர்த்து வைத்து இழப்பீடுகளை நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட், நுகர்வோர்களுக்கு பெற்றுக் கொடுத்துள்ளது.
மக்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும், நுகர்வோர் வழக்குகளில் விரைவான நீதியை வழங்குவதன் மூலமாகவும் மக்களுக்கு நுகர்வோர் கோர்ட் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். 100 நுகர்வோர்கள் பாதிக்கப்பட்டால் 5 நுகர்வோர்கள் தான், நுகர்வோர் கோர்ட்டை நாடுகின்றனர்.
தற்போது நாமக்கல் மாவட்டத்தில் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தரமற்ற குடிநீர், கலப்பட உணவு பொருட்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது ஒழிக்கப்பட வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நுகர்வோர் பாதிப்புகளை தடுக்கவும் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் மாநில அரசின் உத்தரவுப்படி, மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்கப்படும் என்றார்.
நாமக்கல் நுகர்வோர் கோர்ட் உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், நாமக்கல் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் அய்யாவு, சிவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் ராஜவேலு உள்பட திரளான வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.