திருவண்ணாமலை தீப மலை அடிவாரத்தில் வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் மகா தீப மலையின் பல்வேறு பகுதிகளில் சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்து வந்தன. இதனால், சிவனாக வணங்கப்படும் மகா தீப மலையின் புனிதத் தன்மை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் மகா தீப மலையில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றி, மலையின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.
இதேபோல, 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் ஏற்கெனவே இருந்து இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சுமாா் 100-க்கும் மேற்பட்ட குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளங்களை மீட்க வேண்டும் என்று மற்றொரு வழக்கை சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடுத்தாா்.
“மலையே சிவன் தான்” அங்கு எப்படி கழிப்பிடங்கள் கட்டிடங்கள் கட்ட அனுமதிக்கலாம் என்று அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர் ? இவ்விரு வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழு ஆக்கிரமிப்பு குளங்கள், ஆக்கிரமிப்பு வீடுகள் குறித்த கணக்கெடுப்புப் பணியை எடுத்து வருகிறது.
இந்நிலையில் டிசம்பா் 1-ஆம் தேதி திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால் மகா தீப மலையின் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது. வ.உ.சி.நகா், 11-வது தெருவில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் இறந்தனா்.
மலையில் ஏற்பட்ட மண் சரிவை புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறையின் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்ததின் பேரில் தீபத் திருவிழாவின்போது பக்தர்களுக்கு மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது. பல இடங்களில் பெரிய பாறைகள் உருண்டு விழும் அபாய நிலை இருப்பதாகவும் வல்லுனர்கள் குழு அரசிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மலை அடிவாரத்தில் அபாயகரமான பகுதியில் வசித்து வந்த 20 பேர் வெளியேற்றப்பட்டு நகரின் வாடகை வீட்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தற்போது தற்காலிக வீடுகள் கட்டி தரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பொதுமக்கள் வசிக்கத் தகுதியில்லாததாக கருதப்படும் அபாயகரமான சுமாா் 1,500 வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. வசிப்பவா்களிடம் மாற்று இடம் கொடுத்தால் புதிய இடத்துக்குச் செல்வீா்களா?, அல்லது இதே இடத்தில் இருப்பீா்களா? என்ற கருத்துக்களை கேட்கும் பணியில் திருவண்ணாமலை வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனா். அப்பகுதியில் 1535 வீடுகள் புறம்போக்கில் உள்ளது என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.
வருவாய்த்துறை கேட்ட கேள்விக்கு ஒருசிலா் மட்டுமே மாற்று இடத்துக்குச் செல்ல விரும்பம் தெரிவித்தனா். பெரும்பாலானோா் தாங்கள் இதே இடத்தில் இருக்க விரும்புகிறோம். பல ஆண்டுகளாக இங்கேயே வசித்து வருகிறோம். எங்களுக்கு மாற்று இடம் வேண்டாம் என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனா். தெரிவித்ததாக வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.
ஆனால் பொதுமக்கள் இதனை மறுத்து குடியிருப்பு வாசிகள் விருப்ப மனுவில் கையெழுத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு வீட்டை காலி செய்ய விருப்பம் என அதிகாரிகளை எழுதிக் கொள்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.
திடீர் சாலை மறியல்
மாற்று இடம் தேவையில்லை என்று கருத்து தெரிவித்த பொதுமக்களில் சிலா் திடீரென அருணாசலேஸ்வரா் கோயில் பே கோபுரம் எதிரே உள்ள செங்கம் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த காவல், வருவாய்த் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஒருவர் நின்று கொண்டிருந்த பேருந்தின் முன் படுத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது அவரை போலீசார் உடனடியாக அகற்றினர்.
சாலை மறியல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கிறோம் அதுவரை கணக்கெடுப்பு பணி நடக்காது என பேச்சு வார்த்தையின் போது அதிகாரிகள் உறுதி அளித்ததால் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். வருவாய்த் துறையினா் கருத்து கேட்கும் பணியை நிறுத்தியதாலும், போலீஸாா் செய்த சமாதானத்தை ஏற்றும் மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.