திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ. 2.88 கோடிக்கு போலி நகைகள் அடகு வைத்திருப்பது தொடர்பாக, வங்கி மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை காந்தி நகர் பகுதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிழக்கு கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், சேமிப்பு கணக்கு மட்டுமின்றி, நகை அடமான கடன், பயிர் கடன், விவசாய கடன், சிறு தொழில் கடன் போன்றவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை கூட்டுறவு தணிக்கைத் துறை அலுவலா்கள் 7 போ் வங்கியில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து கடந்த சில நாள்களாக ஆய்வு செய்தனா்.
அப்போது, கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 19 நபர்களின் பெயரில் அடகு வைக்கப்பட்டிருந்த 151 நகைகள் கவரிங் என்பதும், இதன் மூலம் ரூ.2.88 கோடி முறைகேடாக கடன் வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை 19 நபர்கள் அடகு வைத்த 151 நகைகள், கவரிங் நகைகள் என்பது தெரியவந்தது. அதன் மூலம், ரூ. 2.88 கோடி கடன் வழங்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, நகைகளின் உண்மை தன்மை குறித்து நகைகளை சரிபார்க்கும் நபர்கள் மூலம் ஆய்வு செய்ததில் அனைத்தும் கவரிங் நகைகள் என்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, போலி நகைகளை திட்டமிட்டு அடகு வைத்து பணம் பெற்று இருக்கலாம் என்பது உறுதியானது.
வங்கியில் பணி புரியும் அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த மோசடி நடந்ததா என துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மாவட்ட மத்திய கூட்டுறவு கிழக்கு கிளையின் மேலாளர் விஜி, உதவி மேலாளர் மற்றும் 3 உதவியாளர்கள் உட்பட 5 பேரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குனர் ஜெயம் உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 5 பேரில் 4 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இது தொடர்பாக தொடர் துறை சார்ந்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கூட்டுறவு வங்கியில் நடந்துள்ள இந்த மோசடி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.