சாதி,மதம்,மொழி இவையனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமே என காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தில் மகா பெரியவர் சுவாமிகளின் வார்ஷிக ஆராதனை மகோற்சவத்தையொட்டி சங்கீத சௌஜன்யம் என்ற கர்நாடக இசை பற்றிய அறிவை வளர்க்ககூடிய ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியால் எழுதப்பட்ட நூல் மற்றும் சங்கரா பல்கலை சமஸ்கிருதத்துறையினர் தயாரித்த விஞ்ஞான ஜாரி என்ற நூல் ஆகியன வெளியீட்டு விழா நடைபெற்றது.
இரு நூல்களையும் சங்கராசாரியார் சுவாமிகள் வெளியிட அதனை தணிக்கையாளரும், பத்திரிகையா ளருமான குருமூர்த்தி பெற்றுக் கொண்டார். இவ்விழாவிற்கு பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எஸ்.ராமச்சந்திரன், சங்கரா பல்கலையின் வேந்தர் குடும்பசாஸ்திரி, வேந்தர் ஜி.சீனிவாசு, சங்கீத சௌஜன்யம் நூலாசிரியர் ஸ்ரீமதி விசாகா ஹரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலை வெளியிட்டு காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் பேசியதாவது:
தமிழகத்தில் சங்கீதக்கலை சிறந்து விளங்குகிறது.சிறந்த சங்கீதக் கலைஞர்களும் இன்றும் இருக்கிறார்கள். அதே போல மதுரை, திருநெல்வேலி, சுசீந்திரம் உள்ளிட்ட இடங்களில் சங்கீத தூண்களும் இருக்கின்றன. சங்கீதத்தைப் பற்றி தேவாரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.
சங்கர மடத்தில் ஆண்டு தோறும் சங்கீதக் கலைஞர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள். தியாகராஜ பாகவதர், முத்துச்சுவாமி தீட்சிதர், ஷியாமா சாஸ்திரிகள் உள்ளிட்ட மும்மூர்த்திகள் வாழ்ந்த புண்ணிய பூமி தமிழகம். சாதி,மதம்,மொழி ஆகிய அனைத்தையும் கடந்து உலக மக்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பது சங்கீதமாகத் தான் இருக்க முடியும்.
மன்மோகன்சிங் பிரதமராவதற்கு முன்பு சங்கர மடத்துக்கு வந்திருந்து மகா பெரியவர் சுவாமிகளை சந்தித்தார். அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன், பெரியோர்கள் முன்னிலையில் மகா சுவாமிகளிடம் நம் நாட்டின் பிரதமராக தகுதி படைத்தவர் என்று அறிமுகப்படுத்தினார்.
பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பிறகு மகா சுவாமிகள் சொன்ன தேதியில் பிரதமராகவும் பொறுப்பேற்றுக் கொண்டவர் மன்மோகன்சிங். கலைகளை, இலக்கியங்களை, இதிகாசங்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்றும் பேசினார்.