திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள விடுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கும் கிரிவலம் செல்வதற்கும் வருகை தருகின்றனர்.
சில வருடங்களாக ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா மாநில பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை தற்போது தங்கும் விடுதிகளும் அதிகரித்து விட்டன வீடுகளும் தாங்கும் விடுதிகளாக மாறிவிட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சூரிய லிங்கம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் சென்னை வியாசர்பாடியில் வசிப்பதாகவும், குடும்பத்துடன் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வந்துள்ளதாகவும் கூறி, மகாகால வியாசர், ருக்மணி பிரியா, ஜலந்தரி, முகுந்த் ஆகாஷ் ஆகியோர் தங்கி உள்ளனர்.
இவர்கள், நால்வரும் நேற்று முற்பகல் வரை வெளியே வரவில்லை. இதையடுத்து, அவர்கள் அளித்த செல்போனை தொடர்பு கொண்டபோது, மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் சந்தேமடைந்த ஊழியர்கள், ஜன்னல் வழியாக பார்த்தபோது 4 பேரும் விஷமருந்திய நிலையில் கிடந்துள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக திருவண்ணாமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 2 ஆண், 2 பெண்கள் சடலமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களது சடலங்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த கடிதம், செல்போன்களை கைப்பற்றினர். ஒரு செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த வீடியோ இடம்பெற்றிருந்தது. ஆன்மிகத்தின் மீதான அதீத பற்றால் 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, விசாரணைக்குப் பிறகு முழு விவரமும் தெரியவரும் என்றனர்.
வளர்ந்து வாழ வேண்டிய பிள்ளைகளுக்கும் விஷத்தை தந்து தற்கொலை செய்து கொண்டதும் ஆன்மீகத்தின் மீதான பற்றால் இதை செய்தோம் என அவர்கள் கூறி இருப்பதும் ஆன்மீகவாதிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.