திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா்(திட்டங்கள்) இரா.விமலா ஆய்வு மேற்கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் கடலுர் சித்துர் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு ரெயில்கள் செல்லும்போது ரெயில்வே கேட் மூடப்படும். இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும். மேலும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த ரயில்வே காட்பாடி -விழுப்புரம் இடையேயான அகல ரயில்பாதை போளூர் நகர் வழியாக செல்கிறது. அடிக்கடி ரயில்கள் வந்து செல்லும் போது ரயில்வே கேட் மூடப்படுவதால் வேலூர், திருவண்ணாமலை சாலையில் கடும் போக்குவரத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் சார்பில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் இருக்க ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்று கடந்த 2012ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா போளூர் ரயில்வே மேம்பாலம் கட்ட அனுமதி வழங்கினார். ஆனால் 7 ஆண்டுகள் கழித்து கடந்த 2019ம் ஆண்டு ஒரு வழியாக பணிகள் தொடங்கப்பட்டது.
ஆனால் தற்போது ஏன் ரெயில்வே மேம்பாலம் வேண்டும் என்று கேட்டோம் என்று பொதுமக்கள் நொந்து கொள்ளும்படி 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் அந்தப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்களும், கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இடையில் நில ஆர்ஜிதம் செய்வதில் வருவாய்த்துறை அலட்சியத்தின் காரணமாகவும் பாலம் கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சனை தொடர்பாக போளூர் எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில பேசினார்.
அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு இந்த பாலத்தை விரைவாக கட்டுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதன்படி நில ஆர்ஜிதம் செய்வதற்கு தனது துறை சார்பில் ₹7 கோடி ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை மூலம் வழங்க உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கட்டுமான பணியை காலதாமதமாக செய்து வந்த பழைய ஒப்பந்த நிறுவனத்தை ரத்து செய்து விட்டு புதிய நிறுவனத்தினிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அமைச்சர் எ.வ.வேலு ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியில் கட்டுமான பணிகளை தொடங்கவும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டு ரயில்வே துறைக்கு சொந்தமான பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வந்தது.
நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் ரூ.27.85 ஒதுக்கீடு செய்யப்பட்டதை தொடர்ந்து கூடுதல் நிதியாக ரூ.7.38 கோடி, நில ஆர்ஜிதம் செய்வதற்காக ரூ.7 கோடி, ரயில்வே துறை சார்பில் ரூ.4 கோடி என மொத்தம் ரூ.46.25 கோடி மதிப்பீட்டில் போளூர் ரயில்வே மேம்பால பணி ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை திட்ட பிரிவு சார்பில் பாலத்தின் மீது மின்விளக்குகள் அமைத்தல், சாலை குறியீடுகள், ரிப்ளக்டர்கள், போன்றவை அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே துறை சார்பில் இருபக்க மேம்பாலங்களுடன் இணைக்கும் இறுதி கட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இதனை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா் (திட்டங்கள்) இரா.விமலா ஆய்வு மேற்கொண்டாா். இதில், கண்காணிப்பு பொறியாளா் (திட்டங்கள்) க.வத்சலா வித்யானந்தி, வேலூா் கோட்ட பொறியாளா் டி.எஸ்.சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.